இனி ஆதார் எண் கட்டாயம்' .. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. மாறிய ரூல்ஸ்

சென்னை: தமிழக அரசின் சீர்மரபினர் சமூகங்களின் நல வாரிய திட்டங்கள் மூலம் பயனடையும் பயனாளிகளுக்கு ஆதார் எண் கட்டாயம் என்பது, ஆதார் சட்டப் பிரிவின்படி அறிவிக்கப்படுகிறது. இந்த வாரியத்தின் மூலம் சீர்மரபினருக்கு கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான நலத் திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இதனை பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்துவது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆதார் இல்லாமல் எந்த நலத்திட்ட உதவிகளையும் பெற முடியாது என்கிற நிலை உள்ளது. ஆதார் கார்டு இருந்தால் மகளிர் உரிமை தொகை கிடைக்கும். ஆதார் இருந்தால் தான் பிறப்பு சான்றிதழ் கிடைக்கும். பள்ளியில் சேர்க்க, கல்லுரிகளில் சேர, ரேஷன் கார்டு வாங்க, பாஸ்போர்ட் வாங்க, வாக்காளர் அடையாள அட்டை வாங்க, ஓட்டுநர் உரிமம் வாங்க, பான் கார்டு வாங்க, முதியோர் உதவி தொகை வாங்க, அரசு தரும் சிலிண்டர் மானியம் வாங்க, வங்கி கணக்கு ஓபன் செய்ய, வங்கியில் செல்போன் எண்ணை மாற்ற, செல்போன் சிம் கார்டு வாங்க என எல்லாவற்றுக்கும் ஆதார் கார்டு வேண்டும்.
ஆதார் இல்லாமல் வாழ முடியாது
ஆதார் இல்லை என்றால் இந்தியாவில் வாழ முடியாது என்கிற அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. சிறுவயதிலேயே ஆதார் கார்டு வாங்க வேண்டும். அப்படி வாங்கவிட்டால், புதிதாக வாங்குவது எளிது அல்ல. அதேபோல் ஆதாரில் பெயர் திருத்தம் செய்வது, செல்போன் எண் மாற்றுவது, ஆதாரில் முகவரி மாற்றம் செய்வது, பிறப்பு தேதியை மாற்றுவது, பயோமெட்ரிக் மாற்றுவது என பல வேலைகள் உடனே எளிதாக செய்துவிட முடியாது. ஒரு நாள் ஆதார் சேவை மையத்திற்கு சென்று காத்திருந்து மாற்ற வேண்டும். ஆதார் சேவை மையங்களில் கூட்டமே நிரம்பி வழிகிறது. இதுதான் எதார்த்தம். ஆதார் சேவைகளை வைத்தே ஒருவரின் அடையாளத்தை அரசு தீர்மானிப்பது தான் காரணம் ஆகும்
தமிழக அரசு அறிவிப்பு
இந்நிலையில் தமிழக அரசின் சீர்மரபினர் சமூகங்களின் நல வாரிய திட்டங்கள் மூலம் பயனடையும் பயனாளிகளுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசிதழில் வெளியிடப்பட்ட, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் விஜயராஜ்குமாரின் உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஆதார் கட்டாயம்
தமிழக அரசின் சீர்மரபினர் சமூகங்களின் நல வாரிய திட்டங்கள் மூலம் பயனடையும் பயனாளிகளுக்கு ஆதார் எண் கட்டாயம் என்பது, ஆதார் சட்டப் பிரிவின்படி அறிவிக்கப்படுகிறது. இந்த வாரியத்தின் மூலம் சீர்மரபினருக்கு கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான நலத் திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன
முதியோர் ஓய்வூதியம்
அந்த வகையில் விபத்துக்கான உதவி, இயற்கை மரணத்திற்கான உதவி, இறுதிச் சடங்கிற்கான செலவு, கல்வி உதவி, திருமண உதவி, மகப்பேறு உதவி, கண் கண்ணாடி செலவை ஈடுகட்டுதல், முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நலத்திட்டங்களை பயனாளிகள் பெறுவதற்காக ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்துவது, அரசின் வினியோக நடவடிக்கைகளுக்கு எளிதாக உள்ளது. பயனாளி தனது அடையாளத்தை பல அட்டைகள் மூலம் நிரூபிக்க வேண்டியது தவிர்க்கப்படுகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.