அதிமுக எதிரி தான் என விஜய் அறுதியிட்டு கூறவில்லை; அங்கே தான் கேள்வி எழுகிறது!” - தொல்.திருமாவளவன்

திருச்சியில், தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "கச்சத்தீவை விட்டு தர மாட்டேன் என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளது பற்றி கேட்கிறீர்கள். கச்சத்தீவு இந்தியாவுக்கு உரியது. குறிப்பாக, தமிழக மக்களுக்கு உரியது. காலகாலமாக அந்தோணியார் திருவிழாவில் பங்கேற்பது வழக்கம். இந்திய அரசு அரசியல் காரணங்களுக்காக இலங்கைக்கு தாரை வார்த்ததை நாம் அறிவோம். அது ஒரு வரலாற்றுப் பிழை. அதனை சீர் செய்ய வேண்டும். கச்சத்தீவை மீட்டு தர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்திய அரசு எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரியது.
இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் கூறியிருப்பது தமிழர்களுக்கு எதிரானது என்பதை விட, இந்திய தேசத்துக்கு விரோதமான கருத்து. அதற்குரிய விளக்கத்தை தர வேண்டும். தமிழக மக்களின் நீண்ட நாள் கலாசார உரிமையையும் மீட்டு தருவதற்கு ஒன்றிய அரசு முன்வர வேண்டும்.
அஜித்குமார் கொலை வழக்கு
அஜித்குமார் கொலையை பொறுத்தவரை முதல்வர் உடனே தலையிட்டு துணிச்சலான முடிவு எடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட அஜித்குமாரின் தாயாரை தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார். சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகள் இந்த கடும் துயரத்திற்கு சற்று ஆறுதலை தருகிறது. எதிர்க்கட்சி வழக்கம் போல சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது என அரசியல் அணுகுமுறையை கையாளுகிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் என்கிற முறையில், தி.மு.க எடுக்கிற நிலைப்பாடுகள் எல்லாவற்றிக்கும் அவர் இது போன்ற கருத்துக்களை சொல்லி வருகிறார். அது, அவருடைய பார்வை. அவருடைய அரசியல். அதனை நாம் விமர்சிக்க முடியாது