கேரள மாவோயிஸ்ட் ரூபேஷுக்கு ஆயுள் தண்டனை - போலி முகவரி மூலம் ‘சிம்’ வாங்கிய வழக்கில் தீர்ப்பு

மதுரை: போலி முகவரி மூலம் சிம் கார்டு வாங்கிய வழக்கில் கேரள மாவோயிஸ்ட் ரூபேஷுக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பெரிங்கோட்டுகுராவைச் சேர்ந்தவர் ரூபேஷ் (எ) பிரவீன் (64). மாவோயிஸ்ட் இயக்கத் தலைவரான இவர் மீது கோவை, ஈரோடு, திருப்பூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில், 2015-ல் கோவையில் இவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் ஏராளமான சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன.
விசாரணையில், ஒரு சிம் கார்டை சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள இடையன்வலசையைச் சேர்ந்த விவசாயி ஒருவரது ரேஷன் கார்டை காட்டி கன்னியாகுமரியில் வாங்கியது தெரியவந்தது. மேலும், அந்த சிம் கார்டை மாவோயிஸ்ட் இயக்கத்துக்கு பயன்படுத்தியுள்ளார். இதையடுத்து, அவர் மீது சிவகங்கை மாவட்ட க்யூ பிராஞ்ச் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி அறிவொளி, ரூபேஷுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.31 ஆயிரம் அபராதம் விதித்து இன்று தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் அழகர்சாமி ஆஜரானார்.