பூர்வீக சொத்தில் மகளுக்கு பங்கு இருக்கா? பூர்வீகச் சொத்தை யார் யாருக்கு தரலாம்? பெண்ணுக்கான உரிமைகள்

பூர்வீக சொத்தில் மகளுக்கு பங்கு இருக்கா? பூர்வீகச் சொத்தை யார் யாருக்கு தரலாம்? பெண்ணுக்கான உரிமைகள்
விவாகரத்தாகிவிட்டாலும் பூர்வீக சொத்தை பெற முடியுமா? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.

சென்னை: பூர்வீக சொத்து என்றால் என்ன? பூர்வீக சொத்துக்களை யார் யாருக்கு தரலாம்? பூர்வீக சொத்தில் பெண்களின் பங்கு என்ன? பூர்வீக சொத்துக்களை வாங்கும்போது கவனத்தில் கொள்வது என்னென்ன? மைனர் வாரிசாக இருந்தவர்களுக்கு பதிலாக கார்டியனுக்கு விற்பனை பத்திரத்தில் கையெழுத்திட்டிருந்தால் அதனை எப்படி பெறுவது? பெண்ணுக்கு விவாகரத்தாகிவிட்டாலும் பூர்வீக சொத்தை பெற முடியுமா? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.

எந்தவொரு சொத்தை வாங்குவதாக இருந்தாலும், பெறுவதாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட சொத்தின் மீதான பாத்தியதை அதன் உரிமையாளருக்கு எப்படி கிடைத்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.. இதனால் பிற்காலத்தில் வரக்கூடிய சட்ட சிக்கல்கள், உரிமையியல் பிரச்சனைகளை களைய உதவும்..

சொத்து வாங்கியதற்கான ஆவணங்களை முறையாக பெற்றிருந்தாலும்கூட, ரியல் எஸ்டேட் சட்ட ஆலோசகர்கள் அல்லது வழக்கறிஞர்களிடம் தந்து அவர்களது கருத்து மற்றும் ஒப்புதலையும் பெற்றுக் கொள்வது மிகவும் நல்லது.

பூர்வீக சொத்து என்றால் என்ன

பூர்வீக சொத்துக்களை பொறுத்தவரை, ஒரு நபரின் தாத்தா அல்லது பாட்டியிடமிருந்து கிடைக்கும் சொத்துக்களேயாகும்.

4 தலைமுறைகளை கடந்த சொத்தாக இருந்தால் அது பூர்வீக சொத்தாக கருதப்படும்.. ஒவ்வொரு தலைமுறையிலும் உள்ள, தனி நபர்களின் எண்ணிக்கை பொறுத்தே, பூர்வீக சொத்துகளின் பங்குகளின் அளவு வித்தியாசப்படும்.. தனி நபருக்கான பிரிவினை என்ற அடிப்படையில் இல்லாமல், ஒரு தந்தைக்கான பங்கு என்ற அடிப்படையில் அமையும்.

ஒருவருக்கு, ஒரு மகன் மட்டுமே இருக்கிறார் என்றால், அந்த சொத்துக்களின் பங்கு முழுவதும், அந்த ஒரு மகனுக்கு மட்டுமே போய் சேரும்.. வாரிசுகள் அதிகமாக இருந்தால், அந்த சொத்தில் பாக பிரிவினை செய்ய வேண்டும். பாக பிரிவினை செய்யும்போது 4 பேருக்கும் சரிசமமாக பிரிக்க வேண்டும். அதுபோல தனித் தனியாக பாக பிரிவினை செய்யும்போது அதை தனி பட்டாவாக மாற்றி கொள்ள வேண்டும்.

பூர்வீக சொத்து தேவையில்லை என்றால்?

ஒருவேளை இந்த பூர்வீக சொத்தில் பாகம் வேண்டாம் என்று சொல்பவர்கள் அதற்கு விடுதலைப் பத்திரம் எழுதித்தர வேண்டும். மேலும், பாக பிரிவினை செய்த இந்த சொத்துக்களை யாருக்கு வேண்டுமானாலும் தானமாகவோ அல்லது கிரையமாகவோ கொடுக்கலாம்.

பூர்வீக சொத்துகளில் வாரிசுக்கு உரிமை உண்டு என்றாலும், சொந்தமாக பெற்றோர் கைப்பற்றிய சொத்து என்றால், அந்த சொத்துக்களில் இருந்து பிள்ளைகளை வெளியேற்றுவதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு..

பூர்வீக சொத்துகளை மட்டுமே பாகப்பிரிவினை செய்ய முடியும்.. ஒருவர் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய தனிப்பட்ட சொத்துகளின் பெயரில் எவரும் உரிமை கொண்டாட முடியாது.. அவரின் விருப்பப்படி அந்த சொத்தை விலைக்கு விற்கலாம். தானமாகவும் தரலாம். யாருக்கும் உயிலாகவும் எழுதி வைக்கலாம்...

பூர்வீக சொத்தில் பெண்களின் உரிமை

இந்து வாரிசுரிமை சட்டம் 2005ன் படி, மகனுக்குள்ள அதே உரிமை, மகளுக்கும் உள்ளது. திருமணம் ஆனாலும், ஆகாவிட்டாலும் பெண்களுக்கும் பங்குள்ளது.. அந்தவகையில், 2005 ம் ஆண்டு சட்டதிருத்தத்திற்குப் பிறகு, மகள் வாரிசாக அதாவது சம வாரிசாக கருதப்படுகிறாள்.

அதேபோல, பெண்ணுக்கு விவாகரத்தாகிவிட்டாலும், முன்னாள் கணவர் வேறொரு பெண்ணை மணந்து அவருக்கு குழந்தைகள் இருந்தாலுமே, இந்த பெண்ணின் மகனுக்கு பூர்வீக சொத்தில் உரிமை உள்ளது..

அதேபோல, அப்பா உயில் எழுதாதபட்சத்தில், நேரடி வாரிசுகளுக்கு சம பங்கு உள்ளது. ஒருவேளை, திருமணமான பெண்ணின் அப்பா, தான் சுயமாக சம்பாதித்த சொத்தை வேறு யாருக்காவது உயில் எழுதி வைத்திருந்தால் அதில் பங்கு கேட்க முடியாது. இந்து வாரிசு உரிமை சட்டத்தின்படி, இது இந்துக்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற மதத்தினருக்கு வித்தியாசப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சொத்து விற்பனை

எனவே, மணமான பெண்களை கணக்கில் கொள்ளாமல், ஏதாவது காரணத்துக்காக, ஒரு குடும்பத்தின் மூதாதையர் சம்பாதித்த சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டால், அதை வாங்குபவர்கள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். சம்பந்தப்பட்ட பெண் அங்கத்தினருடன் கலந்து பேசி, அவரிடமிருந்து ஒப்புதல் பத்திரம் (Deed of Consent) எழுதி கொள்வதன் மூலம் சட்ட ரீதியான சிக்கல்களை எளிதாக தவிர்க்க இயலும்.

மைனருக்கு பதிலாக கார்டியன் பெயரில் சொத்து

ஒரு சில குடும்ப சொத்துக்கள் விற்கப்படும் காலத்தில், மைனர் வாரிசாக இருந்தவர்களுக்கு பதிலாக, தாய், தகப்பன் அல்லது நெருங்கிய உறவினர் போன்றோர் கார்டியனாக இருந்து விற்பனை பத்திரத்தில் கையெழுத்திட்டிருக்கலாம்..

சில வருடங்களுக்கு பிறகு, சொத்தின் மைனர் வாரிசு மேஜராகும்போது, அவர் சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கும் வாய்ப்புள்ளது.. அப்படிப்பட்ட சூழலில், மைனர் சொத்துக்களை நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகே வாங்க வேண்டும். அல்லது மேஜர் உரிமையாளர் மூலம் ஒப்புதல் பத்திரம் எழுதிப்பதிவு செய்து கொள்ளலாம்.. இதனால் சட்டசிக்கல்களை தவிர்க்க முடியும்.