சம்பாதித்து சாப்பிடுங்க..'' - ரூ.12 கோடி, BMW கார் ஜீவனாம்சம் கேட்ட மனைவியிடம் உச்ச நீதிமன்றம்

சம்பாதித்து சாப்பிடுங்க..'' - ரூ.12 கோடி, BMW கார் ஜீவனாம்சம் கேட்ட மனைவியிடம் உச்ச நீதிமன்றம்
விவாகரத்து வழக்கு ஒன்றில் கணவரிடமிருந்து தனக்கு ஜீனாம்சமாக ரூ.12 கோடியும், பி.எம்.டபிள்யு காரும் வேண்டுமென்று மனைவி கோரிக்கை வைத்திருக்கிறார்.

விவாகரத்து வழக்கு ஒன்றில் மனைவிக்கு சாதகமான மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கணவர் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று (ஜூலை 22) விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, இருவருக்கும் திருமணமாகி 18 மாதங்கள்கூட ஆகாத நிலையில் இருவரும் விவாகரத்து முடிவுக்கு சென்றிருப்பதால், கணவரிடமிருந்து தனக்கு ஜீனாம்சமாக ரூ. 12 கோடியும், பி.எம்.டபிள்யு காரும் வேண்டுமென்று மனைவி கோரிக்கை வைத்திருக்கிறார்...

ஜீவனாம்சம் - நீதிமன்றம்

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "நீங்கள் நன்கு படித்திருக்கிறீர்கள். உங்களுக்காக நீங்கள் சம்பாதிக்க வேண்டும். எம்.பி.ஏ படித்து ஐ.டி துறையில் அனுபமிக்கவராக இருக்கும்போது நீங்கள் ஜீவனாம்சத்தை நம்பியிருக்கக் கூடாது. படித்திருக்கும்போது உங்களுக்காக நீங்கள் யாசகம் கேட்கக் கூடாது. நீங்களே சம்பாதித்து சாப்பிட வேண்டும்." என்றார்.

மேலும் நீதிபதி, ``திருமணமாகி 18 மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் இவ்வளவு ஜீவனாம்சம் கேட்கிறீர்கள்? தகுதிவாய்ந்த பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக சம்பாதிக்க வேண்டும். தங்கள் கணவர்களிடமிருந்து ஜீவனாம்சப் பணம், பராமரிப்பு கோரக்கூடாது. நீங்கள் ஒரு ஐடி நபர். எம்.பி.ஏ படித்திருக்கிறீர்கள். உங்கள் தேவைக்காக பெங்களூரு, ஹைதராபாத் என ஏன் உங்கள் துறை சார்ந்த இடங்களில் வேலை செய்யக்கூடாது?

உங்களுக்கும் ஒரு BMW வேணுமா?. இதன் மூலம் நீங்கள் விரும்புவது என்ன? உங்கள் சொந்த விருப்பப்படி வேலை செய்ய வேண்டாம் என்று முடிவு செய்து, அனைத்து சுமைகளிலிருந்தும் விடுபட விரும்புகிறீர்களா?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்...

அப்போது, தனது கணவர் பணக்காரர் என்றும், தனக்கு ஸ்கிசோஃப்ரினியா (schizophrenia - mental disorder) இருப்பதாகக் கூறி திருமணத்தை ரத்து செய்யக் கூட முயன்றதாகவும் தெரிவித்த அந்தப் பெண், "நான் ஒரு ஸ்கிசோஃப்ரினியா நோயாளியைப் போல இருக்கிறேனா?" என்று கேட்டார்.

மறுபக்கம், கணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஜீவனாம்சத்தை இவ்வளவு ஆடம்பரமாக கோர முடியாது.

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அவரும் வேலைக்குச் செல்ல வேண்டும். எல்லாவற்றையும் இப்படிக் கேட்க முடியாது" என்றார்...

பின்னர், கணவரின் கடந்த கால வருமானம், ரூ. 2.5 கோடி சம்பளம் என்பதையும், பணியில் இருந்தபோது ரூ.1 கோடி போனஸ் ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார் என்பதையும் கவனித்த தலைமை நீதிபதி, இரு தரப்பினரும் முழுமையான நிதி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும், கணவருடைய தந்தையின் சொத்தில் உரிமை கோர முடியாது என்று வலியுறுத்திய தலைமை நீதிபதி இரண்டு சாய்ஸ் கொடுத்தார்.

ஒன்று, அடுக்குமாடி குடியிருப்பைப் பெற்றுக்கொள்வது அல்லது ரூ. 4 கோடி பெற்றுக்கொள்வதுடன் புனே, ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களில் ஐ.டி வேலை தேடுவது.

பின்னர், இறுதி உத்தரவுக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் இதேபோன்ற ஒரு வழக்கில், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சந்திர தாரி சிங், ``எல்லா சுமையும் உங்கள் இணையர் மீது சுமத்திவிட்டு, நீங்கள் சும்மா இருக்க வேண்டும் என சட்டம் ஊக்குவிக்கவில்லை. சம்பாதிக்கும் திறன் கொண்ட தகுதிவாய்ந்த பெண்கள் தங்கள் கணவர்களிடமிருந்து இடைக்கால பராமரிப்பு கோரக்கூடாது. வாழ்க்கைத் துணைவர்களிடையே சமத்துவத்தைப் பேணுவதற்கும் மனைவிகள், குழந்தைகள் மற்றும் பெற்றோருக்குப் பாதுகாப்பை வழங்குவதையும்தான் சட்டம் நோக்கமாகக் கொண்டிருக்கிறது" என்றார்.