ஆண்டு வருமானம் ரூ.3 மட்டுமே கொண்ட விவசாயி:குளறுபடி வருமானச் சான்றிதழ் இணையத்தில் வைரல்

ஆண்டு வருமானம் ரூ.3 மட்டுமே கொண்ட விவசாயி:குளறுபடி வருமானச் சான்றிதழ் இணையத்தில் வைரல்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் விவசாயி ஒருவரின் ஆண்டு வருமானம்

சட்னா: மத்தியப் பிரதேச மாநிலத்தில் விவசாயி ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.3 எனக் காட்டும் சான்றிதழ் சமூக ஊடகங்களில் வைரலானது.

மத்தியபிரதேசம் மாநிலம் சட்னா மாவட்டத்தின் கோதி தாலுகாவின் கீழ் உள்ள நயாகான் கிராமத்தை சேர்ந்தவர் ராம்ஸ்வரூப் 45, இவர் வருமான சான்றிதல் வேண்டி விண்ணப்பித்திருந்தார். அவருக்கு வழங்கப்பட்ட வருமான சான்றிதழில் ஆண்டு வருமானம் ரூ.3 என குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த புகைப்படம் , ஜூலை 22ம் தேதி தாசில்தார் சவுரப் திவேதி கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட ஆவணம், சமூக ஊடகங்களில் வைரலானது. நெட்டிசன்கள் ராம்ஸ்வரூப்பை நாட்டின் ஏழ்மையான மனிதர் என அழைத்தனர்.

இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுத்து ஜூலை 25ல் புதிய சான்றிதழ் வழங்கப்பட்டது.

இது குறித்து தாசில்தார் சவுரப் திவேதி கூறியதாவது:

ராம்ஸ்வரூப் வருமான சான்றிதழில், மாத வருமானம் 25 பைசாவாக என்று குறிப்பிடப்பட்டு ஆண்டு வருமானம் ரூ.3 என்று இருந்தது.இந்த பிழை, எழுத்தரால் ஏற்பட்டது. தகவல் அறிந்த உடன் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு வழங்கப்பட்ட வருமான சான்றிதழில், மாத வருமானம் ரூ.2,500 என கணக்கிடப்பட்டு ஆண்டு வருமானம் ரூ.30,000 என மாற்றப்பட்டு, புதிய வருமான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றார்.