கேஸ் சிலிண்டர் பில்லை பாருங்க.. எவ்வளவு பணம் இதுவரை தந்தீங்க.. செங்கல்பட்டு கலெக்டர் குட்நியூஸ்

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் அந்தந்த நிறுவனங்களின் ஏஜென்சிகள் மூலம் வீடுகளில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு வினியோகிக்கப்படும் சிலிண்டர்களை பொதுமக்கள் வாங்கும் போது அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக பணம் செலுத்த வேண்டாம். எவரேனும் நிர்பந்தித்தால் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளிக்கலாம் என கலெக்டர் சினேகா அறிவித்துள்ளார்
எந்த ஒரு கேஸ் ஏஜென்சியும் டெலிவரி செய்யும் போது கஸ்டமர்ரிடம் கூடுதலாக வாங்கலாம் என்று அறிவிக்கவில்லை.. கேஸ் நிறுவனங்களுமே கூடுதல் தொகை வாங்கக்கூடாது என்றே வலியுறுத்தி வருகின்றன. ஆனாலும் 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கூடுதலாக கேட்பது நடக்கிறது. பெரிய மாடி வீடுகளில் கஷ்டப்பட்டு தூக்கி வரும் டெலிவரிமேன்களுக்கு அவர்களாக விருப்பட்டு கூடுதல் தொகை தருவதில் பிரச்சனை இருப்பது இல்லை..
சில டெலிவரி மேன்கள் கூடுதலாக 50 ரூபாய் கட்டாயம் தர வேண்டும் என்று நிர்பந்தம் செய்வது ஆங்காங்கே நடக்கிறது. வயதானவர்கள் வசிக்கும் வீடுகளில், பெண்கள் மட்டுமே வசிக்கும் வீடுகளில் சிலிண்டர் டெலிவரி செய்யும் சிலர், கூடுதலாக கட்டணம் கேட்டு நிர்பந்தம் செய்வது நடக்கிறது. இதுபற்றி பலமுறை எச்சரித்தும் சிக்கல்கள் குறையவே இல்லை.டாஸ்மாக்கில் கூடுதலாக 10 ரூபாய் கதை போலவே இதுவும் இன்று வரை தொடர்கிறது
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் அந்தந்த நிறுவனங்களின் ஏஜென்சிகள் மூலம் வீடுகளில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு வினியோகிக்கப்படும் சிலிண்டர்களை பொதுமக்கள் வாங்கும் போது அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக பணம் செலுத்த வேண்டாம் எனவும், அவ்வாறு எவரேனும் நிர்பந்தித்தால் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளிக்கலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் வீடுகளுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் போது எடையளவில் சந்தேகம் இருப்பின் எடைபோட்டு வழங்குமாறு கேட்கலாம். எடை குறைவாக இருப்பின் அச்சிலிண்டரை அவரிடமே ஒப்படைத்து வேறு சிலிண்டர் பெறலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும், சிலிண்டர் வாங்கும் போது அதில், சீலிட்ட உறை இருப்பதை உறுதி செய்து கொள்ளும்படி நுகர்வோர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது