திருப்பூரில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் அத்துமீறல்? ஏசி பெட்டி டிக்கெட் பரிசோதகரை சுத்துப்போட்ட உறவுகள்

திருப்பூரில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் அத்துமீறல்? ஏசி பெட்டி டிக்கெட் பரிசோதகரை சுத்துப்போட்ட உறவுகள்
அநாகரிகமாக நடந்து கொண்டதாக அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர்: திருப்பூர் முருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் திருப்பூருக்கு கடந்த ஜூலை மூன்றாம் தேதி மொரப்பூரில் முன்பதிவு இல்லா டிக்கெட் எடுத்துக்கொண்டு வெஸ்ட் கோஸ்ட் ரயிலில் ஏசி பெட்டியில் ஏறினாராம். அப்போது ஏசி பெட்டியில் டிக்கெட் பரிசோதகரான பாரதி என்பவர் தன்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், மேலும் அநாகரிகமாக நடந்து கொண்டதாக அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரயில்களை பொறுத்தவரை எப்போதுமே கூட்டம் அதிகமாக இருக்கும். சில நேரங்களில் முன்பதிவு பெட்டியில் இடம் இல்லாத நிலைவரும் போது, படுக்கை வசதி கொண்ட பெட்டியிலோ அல்லது ஏசி பெட்டியிலோ பயணிகள் ஏறுவது நடக்கிறது. அப்படி முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறினால், அந்த பயணி அடுத்த ரயில் நிலையத்தில் கீழே இறக்கிவிடப்படுவார். மேலும் அவருக்கு கடுமையான அபராதமும் விதிக்கப்படும். ரயில்களில் தொடர்ந்து பயணிக்க அனுமதி கிடையாது.

அவர்கள் வேண்டுமானால், முன்பதிவு செய்யாத பெட்டிகளில் ஏறி வரலாம். முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறிக்கொண்டு இறங்க மறுத்தால், காவல்துறை உதவி மூலம் அவர்களை டிக்கெட் பரிசோதகர் வெளியேற்றலாம். இல்லாவிட்டால் அவர்களே வேறு பெட்டியில் ஏறுமாறு எச்சரிக்கவும் செய்யலாம். இதுதான் நடைமுறை. ஆனால் ஒரு சில டிக்கெட் பரிசோதகர்கள் பயணிகடம் நடந்து கொள்ளும் விதம் முகம் சுளிக்கும் வகையிலும், அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. சில நேரங்களில் பெண் பயணி என்று கூட பாராமல், அநாகரீகமாக நடந்து கொள்வதால் புகார் உள்ளது. அப்படி ஒரு குற்றச்சாட்டைத்தான் பெண் பயணி எழுப்பியுள்ளார்.

திருப்பூர் முருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் திருப்பூருக்கு கடந்த ஜூலை மூன்றாம் தேதி மொரப்பூரில் முன்பதிவு இல்லா டிக்கெட் எடுத்தாராம். பின்னர் வெஸ்ட் கோஸ்ட் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தார். ரயில் இரண்டு நிமிடம் மட்டுமே நிற்கும் என்பதால் அவர் முன்பதிவு இல்லாப் பெட்டிக்கு ஏற முற்பட்டபோது ரயில் புறப்பட ஒலி எழுப்பிவிட்டதாம்.

இதைத்தொடர்ந்து அவர் அருகில் இருந்த ஏசி பெட்டியில் முருகம்பாளையம் ஏறியுள்ளார். ஏசி பெட்டியில் டிக்கெட் பரிசோதகரான பாரதி என்பவர் அந்த பெண்ணிடம் ஏன் ஏசி பெட்டியில் ஏறினீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். மேலும் அநாகரிகமாக நடந்து கொண்டதாக அந்த பெண் குற்றம்சாட்டுகிறார். இதைத்தொடர்ந்து அந்த பெண் திருப்பூரில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து இரவு 9:00 மணிக்கு ரயில் வந்தவுடன் டிக்கெட் பரிசோதகர் பாரதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்கள்

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து விசாரணைக்கு பின்னர் திருப்பூர் இருப்புப் பாதை காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் டிக்கெட் பரிசோதகர் என்பதால் அவருக்கு முன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் சேலம் கோட்டம் அருகே நடைபெற்றதால் இந்த வழக்கு சேலம் ரயில்வே காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் திருப்பூர் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.