புறப்பட்ட சில நிமிடங்களில் திரும்பி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்: பயணிகள் தவிப்பு

ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் விமானம் இன்று காலை 6.41 மணிக்கு தாய்லாந்தின் பூகெட் நகரத்திற்கு புறப்பட்டுசென்றது. விமானம் புறப்பட்ட 20 நிமிடத்தில் மீண்டும் ஐதராபாத்திற்கே திரும்பி வந்தது.
இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். தொழில் நுட்ப கோளாறு காரணமாக விமானம் மீண்டும் ஐதாராபத்திற்கே திருப்பி விடப்பட்டதாகவும், பயணிகள் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தி தொடர்பாளர் கூறினார்.
விமானம் ஐதாராபத் திரும்பி வந்த பிறகு நீண்ட நேரம் விமானத்திற்குள்ளே அமர வைக்கப்பட்டுவிட்டதாக பயணிகள் பலரும் ஆதங்கத்துடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.