36 வயதில் வேலை போய்விட்டது.. ஆனாலும் கவலை இல்லை.! மாதம் ரூ.1.5 லட்சம் வருமான

சென்னை: இந்தக் காலத்தில் எல்லாம் நாம் எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்கேற்பச் செலவுகளும் இருந்துவிடுகிறது. இதனால் வேலை பறிபோனால் அடுத்து என்ன செய்வதென்ற பயம் நிச்சயம் எல்லாருக்கும் இருக்கும். அப்படித் தான் இங்கு 36 வயதான ஒருவருக்குத் திடீரென வேலை போய்விட்டது. ஆனால், அவர் அதைப் பற்றி துளியும் கவலைப்படவில்லையாம். ஏனென்றால் வேலை இல்லாமல் இதர வருமானம் மூலமாகவே அவருக்கு ரூ.1.5 லட்சம் வருமானம் வருகிறதாம். இதை அவர் எப்படிச் சாத்தியப்படுத்தினார். இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ரெட்டிட் தளத்தில் தான் அந்த நபர் தனது திட்டத்தைப் பகிர்ந்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகவும், வேலையிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் தனது மாதாந்திர வருமானமாக ரூ.1.5 லட்சம் வருவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், இதற்காக அவர் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு அந்தச் செல்வத்தை உருவாக்க வேண்டி இருந்துள்ளது.
வேலை போச்சு
வட டெல்லியில் வசிக்கும் 36 வயதான அந்த நபர், "நான் வேலையை விட்டு நீக்கப்பட்டாலும், எனது நிலைமை மோசமாக இல்லை. இனி வேறு வேலை செய்ய விரும்பவில்லை. எனது நிதி திட்டமிடல் குறித்து இங்கு நான் பகிர்ந்து கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். அவர் தனது குடும்பத்தில் மனைவி, மகள் மற்றும் தாய் ஆகியோர் இருப்பதாகக் கூறுகிறார். மளிகை சாமான்கள், பில்கள் என மாதாந்திர செலவுகள் ரூ.85,000 முதல் ரூ.90,000 வரை ஆவதாகக் குறிப்பிடுகிறார்.
மேலும், குடும்பத்தினர் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வெளியூர் ட்ரிப் செல்கிறார்கள். அதற்கு மட்டும் ரூ.20,000 ஆகிறதாம். இந்தச் செலவுகளை மட்டும் அடுத்த சில ஆண்டுகளுக்குக் குறைக்க வேண்டி இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். இதுபோல அவர் தனது குடும்பத்தின் செலவுகளைப் பட்டியலிட்டுள்ளது ஓகே.. அப்போ வருமானம் எப்படி? அதையும் அவர் பகிர்ந்துள்ளார்.
வருமானங்கள்
வாடகை மூலமாக மட்டுமே அவருக்கு மாதாமாதம் ரூ.1,20,000 வருமானம் கிடைக்கிறதாம். இது ஒவ்வொரு ஆண்டும் 4-5% அதிகரிக்கும் என அவர் குறிப்பிடுகிறார்.
மேலும், ஷேர் மார்கெட்டில் இதுவரை செய்த முதலீடு மூலம் மாதாமாதம் டிவிடெண்ட்டாக மட்டும் ரூ.40,000-45,000 வரை கிடைப்பதாகக் குறிப்பிடுகிறார். ஷேர் மார்கெட்டில் ரூ.2.5 கோடி அளவுக்கு அவர் முதலீடு செய்துள்ளாராம்.
இதுபோக வங்கியில் செய்த முதலீட்டின் மூலம் மாதம் ரூ.6,000 கிடைக்கிறதாம். வங்கியில் அவருக்கு ரூ.12 லட்சம் இருக்கிறது.
இப்படி எல்லாவற்றையும் சேர்க்கும் போது மாதம் சுமார் ரூ.1.5-1.6 லட்சம் வரை வருமானம் வருகிறது என்று அவர் தனது ரெட்டிட் தளத்தில் குறிப்பிடுகிறார்.
இதர சொத்துகள்
இதுபோக ரூ.28 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி, ரூ.12 லட்சம் மதிப்புள்ள மியூட்வல் பண்ட்கள் மற்றும் ரூ.65 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை ரொக்கமும் இருக்கிறதாம். அவர் மேலும் கூறுகையில், "இப்படி எனக்கு நல்ல வருமானம் இருக்கிறது. ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது. மொத்தம் ரூ.1.5 கோடி மதிப்பில் 3 கட்டப்பட்டு வரும் மூன்று வீடுகளை வாங்கியுள்ளேன். அதற்கு ரூ.80 லட்சம் அடுத்த 2-3 ஆண்டுகளில் செலுத்த வேண்டும்.
இப்படிக் கணிசமான தொகையை இஎம்ஐ ஆக செலுத்த இருப்பதால்.. இப்போது எந்த ரிஸ்க்கும் எடுக்க விரும்பவில்லை. மேலும், இப்போது எனது மனைவி கர்ப்பமாகவும் இருக்கிறார். இதனால் மருத்துவச் செலவுகளுக்குப் பணம் தேவை. இதனால் மீதமுள்ள தொகையை முதலீடு செய்ய விரும்பவில்லை. இப்போது எனது மனைவியுடன் இருக்க விரும்புகிறேன். குழந்தையை ஒன்றாக வளர்க்க விரும்புகிறேன்.
வேலைக்குப் போக விரும்பவில்லை
நான் மீண்டும் வேலைக்குப் போக விரும்பவில்லை. அந்த நாட்களில் எவ்வளவு பிரஷர் இருந்தது என்பது எனக்குத் தான் தெரியும். என் மனைவி நான் கஷ்டப்படுவதைப் பார்த்திருக்கிறாள்" என்று அவர் பதிவிட்டுள்ளார். அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதற்குப் பல்வேறு தரப்பினரும் பலவிதக் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்
அவர் நல்ல சம்பளத்தில் வேலையில் இருந்ததால் இந்தளவுக்குச் சேமிக்க முடிந்துள்ளது. அனைவராலும் 36 வயதிலேயே இந்தளவுக்குச் சேமிப்பை எட்ட முடியாது என்ற போதிலும்.. சீக்கிரமே பணத்தைச் சேமித்து முதலீடுகளை ஆரம்பித்தால் எப்போதும் நாம் கவலைப்படத் தேவையிருக்காது என்பதையே இது உணர்த்துவதாக உள்ளது.