கொல்லிமலை பழங்குடிகளின் உணவுமுறையையே மாற்றிய காலநிலை மாற்றம் - ஆய்வில் தெரிய வந்த உண்மை

சிறுவயதில் எங்கள் நிலம் முழுவதிலும் கேழ்வரகு போன்ற சிறுதானியங்களைத் தான் பயிரிடுவோம். ஆனால் இப்போது மிகச் சிறிய அளவில் வீட்டுத் தேவைக்காக மட்டுமே சிறுதானியங்களைப் பயிரிடுகிறோம்" என்கிறார் கொல்லிமலையைச் சேர்ந்த பழங்குடி விவசாயியான லஷ்மி.
ஏன் லஷ்மி போன்ற விவசாயிகளால் முன்பு இருந்ததைப் போன்று, சிறுதானியங்களை அதிகளவில் பயிரிட முடிவதில்லை?
தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,000-1,300 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கொல்லிமலை. இங்குள்ள கிராமங்களில் மலையாளி எனப்படும் பழங்குடிகள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பழங்குடிகளில் மலையாளி பழங்குடிகள் 68.34% பேர் உள்ளனர்.
மலையாளி பழங்குடிகள், பல தலைமுறைகளாகவே சிறுதானியங்களைப் பயிரிட்டு வருகின்றனர். அவர்களின் மரபு மற்றும் உணவுப் பழக்கத்திலும் சிறுதானியங்கள் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன.
ஆனால், காலநிலை மாற்றமும் வாழ்வாதார நெருக்கடிகளும் பாரம்பரியமாக சிறுதானியங்களைப் பயிரிடும் வழக்கத்தில் இருந்து அவர்கள் மாறி வரும் போக்கு மீது சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று வெளிச்சம் பாய்ச்சியுள்ளது.
ஆய்வு கூறுவது என்ன?
https://www.frontiersin.org/ எனும் இணையதளத்தில் கொல்லிமலையில் உள்ள பழங்குடி விவசாயிகள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று சமீபத்தில் வெளியானது.
பாலப்பாடி, அலேரிப்பட்டி, எட்டடிப்பாறை, பெல்லக்காடு, ஊர்ப்புறம் ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த 125 விவசாயிகள் மத்தியில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் கொல்லிமலையில் சமீப ஆண்டுகளாக வறட்சி, வெப்பநிலையில் மாறுபாடுகள், தவறும் பருவமழை போன்றவை அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.
இதன் விளைவாக, காலநிலை மாற்றத்தைத் தாங்க வல்லதாக அறியப்படும் சிறுதானியங்களில் இருந்து மாறி, பழங்குடி விவசாயிகள் வேறு சில பயிர்களை விளைவிக்கும் போக்கு அந்தக் கிராமங்களில் அதிகரித்து வருவதை இந்த ஆய்வு எடுத்துக் காட்டுகிறது.
இந்த ஐந்து கிராமங்களிலும் கடந்த பத்தாண்டு கால மழைப்பொழிவு, வெப்பநிலை தரவுகள் இந்த ஆய்வின் ஒரு பகுதியாக ஆராயப்பட்டன. அதன்படி, சராசரி ஆண்டு மழைப்பொழிவு 870-1,200 மி.மீ என்ற அளவில் இருந்துள்ளது. இது, அந்தக் காலகட்டத்தில் சிறுதானிய சாகுபடிக்கு உறுதுணையாக இருந்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டில் ஹெக்டேருக்கு 2 டன்கள் என்ற அளவில் சாகுபடி நிகழ்ந்துள்ளது. ஆனால், 2022-2023 காலகட்டத்தில் வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயர்ந்ததால், சாகுபடி 2 டன்களுக்கு கீழே குறைந்துள்ளது.
ஆய்வில் குறிப்பிட்டுள்ளதன்படி, இந்த கிராமங்களில் 78% விவசாயிகள் 1.5 ஹெக்டேருக்கும் குறைவாக சொந்தமாக நிலம் வைத்துள்ளனர். 16 சதவிகித விவசாயிகள் 1.6–3 ஹெக்டேர் எனும் அளவில் நிலம் வைத்துள்ளனர். 60 சதவிகித விவசாயிகளுக்கு விவசாயம் மூலம் ஆண்டுக்கு ரூ.55,000-ரூ. 80,000 வரை வருமானம் வருகிறது. இந்த விவசாயிகளுள் 66% பேர் ஸ்மார்ட்ஃபோன்களையும், 34% பேர் சாதாரண மொபைல்களையும் பயன்படுத்துகின்றனர்.
இங்குள்ள பழங்குடிகள் தாங்கள் காலநிலை மாற்றத்தையும் அதன் விளைவுகளையும் அறிந்துள்ளதை இந்த ஆய்வு காட்டுகிறது. நிதி ஆதாரம், நிலம், உபகரணங்கள் இல்லாத சிறு விவசாயிகளே காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவதாக இந்த ஆய்வு கூறுகிறது.
இந்த ஆய்வில் பங்கேற்ற சில விவசாயிகள், காலநிலை மாற்றத்தால் "அதிக ஆதாரங்களை அணுக முடிந்த விவசாயிகளைவிட ஏழை விவசாயிகள் பயிர் விளைச்சல், வருமானம், வளங்களை அணுகுதல் போன்றவற்றில் பிரச்னைகளை எதிர்கொள்வதாக," தெரிவித்துள்ளனர்.
மேலும், காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் "விவசாயத்தின் அனைத்து அம்சங்களிலும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக" விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இவை தவிர, "வெப்பமான நாட்கள் அதிகரித்திருப்பது", "குளிர்காலம் குறைதல்", "குளிர்காலம், கோடைக் காலம் தொடங்குதலில் ஏற்பட்ட மாற்றங்கள்", "மழை பெய்யும் நாட்கள் குறைதல்," ஆகியவற்றைப் பெரும்பாலான விவசாயிகள் உணர்ந்துள்ளதை இந்த ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது.
'நல்ல விளைச்சல் இல்லை'
"என் சிறுவயதில் எங்கள் கிராமத்தில் கேழ்வரகு, திணை, புழுகி நெல் பயிரிடுவார்கள். இதில், புழுகி நெல் மழை நீரை மட்டுமே நம்பிப் பயிரிடப்படும் மானாவாரிப் பயிர். கேழ்வரகு ஆடி மாதத்தில் விதைத்து, தை மாதத்துக்குள் (ஜூலை - ஜனவரி) அறுவடை செய்யப்படும் ஆறு மாத காலப் பயிர்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மழை முன்பைவிடக் குறைவாகவே பெய்கிறது. மழை குறைவால் எங்களுக்கு நல்ல விளைச்சல் கிடைப்பதில்லை" என்கிறார், கொல்லிமலையின் வளப்பூர் நாடு ஊராட்சியில் உள்ள பெரியகோவிலூரைச் சேர்ந்த 45 வயதான...
கொல்லிமலையைச் சேர்ந்த பழங்குடி விவசாயிகள் கடந்த சில பத்து ஆண்டுகளில் மிளகு, மரவள்ளிக் கிழங்கு போன்ற பணப் பயிர்களைப் பயிரிடுவதை நோக்கி நகர்ந்துள்ளதை லஷ்மி போன்ற விவசாயிகளிடம் பேசியதில் இருந்து அறிய முடிகிறது.
தன் கணவருக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தில் பாதியில் மிளகும், மீதி நிலத்தில் சிறுதானியமும், வாழையும் பயிரிட்டுள்ளனர். பருவம் தப்பிய மழை, அதிகரிக்கும் வெப்பநிலை போன்றவை இல்லாமல் இருந்தால், "முழு நிலத்திலும் கேழ்வரகையே பயிரிட்டிருப்போம்," எனக் கூறுகிறார் லஷ்மி.
வாழ்வாதாரச் சிக்கல்கள்
கேழ்வரகு, கம்பு, திணை போன்ற முதன்மை சிறுதானிய பயிர்கள் மழையை நம்பியே பயிரிடப்படுகின்றன. அப்படியிருக்கும்போது, மழை பொழிதலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சிறுதானிய சாகுபடியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைதல், மழை பொழியும் நாட்களின் எண்ணிக்கை, கணிக்க முடியாத வானிலை உள்ளிட்டவற்றில் காலநிலை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பருவமழையைத் தாண்டி, அந்தப் பகுதியில் உள்ள மலைச் சவுக்கு (silver oak) மரங்கள் மழைநீரை அதிகமாக உறிஞ்சிவிடுவதாலும் தங்கள் விவசாயம் பாதிக்கப்படுவதாக லஷ்மி குறைபட்டுக் கொள்கிறார்.
காலநிலை மாற்றம் ஒருபுறம் இருக்க, தங்கள் வாழ்வியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் வாழ்வாதாரச் சிக்கல்களாலும் வேறு பயிர்களை விளைவிக்க கொல்லிமலை பழங்குடி மக்கள் ஆர்வம் கொள்கின்றனர்.
மலையாளி பழங்குடிகளை எடுத்துக்கொண்டால், இந்தப் பகுதிகளில் எல்லா படிப்புகளையும் இப்போது படிக்கும் குழந்தைகள் உள்ளனர். எங்கள் குழந்தைகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுகின்றனர். அதிக வருமானம் மிளகில்தான் கிடைக்கிறது. சிறுதானியங்களில் அதிக வருமானம் இல்லை என்பதால்தான் வேறு பயிர்களுக்கு மாறுகிறோம்" என்கிறார், லஷ்மி.
கடந்த ஆண்டு தனக்கு கேழ்வரகு சாகுபடியின் மூலம் 15,000 ரூபாய் வருமானம் கிடைத்ததாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இந்த கிராம மக்கள் கேழ்வரகு போன்ற தானியங்களை சந்தையில் விற்பதைவிட தங்களின் தேவைக்காகவே பயிரிட விருப்பம் கொள்கின்றனர்.
"கேழ்வரகை சந்தையில் சென்று விற்பதைவிட நாங்கள் அதிகமாக வீட்டுப் பயன்பட்டிற்கே வைத்துக் கொள்வோம்" என்கிறார் லஷ்மி
கடந்த 2023ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா அங்கீகரித்தது. அதைத் தொடர்ந்து, இந்திய அரசு 2023இல் சிறுதானிய இயக்கத்தை ஏற்படுத்தியது. அதே ஆண்டில், தமிழ்நாட்டிலும் அதுபோன்று ஐந்தாண்டு சிறுதானிய இயக்கம் ஏற்படுத்தப்பட்டு, அந்த ஆண்டு வேளாண் பட்ஜெட்டில் ரூ. 82 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
அதன்படி, "50 ஆயிரம் ஏக்கரில் சிறு தானிய சாகுடி செய்யப்படும். சிறு தானிய திருவிழாக்கள் நடத்தப்படும்" என அறிவிக்கப்பட்டது. சிறுதானியங்களை அதிகளவில் கொள்முதல் செய்து சென்னை, கோயம்புத்தூரில் உள்ள அமுதம், சிந்தாமணி, காமதேனு போன்ற கூட்டுறவு சங்கக் கடைகளில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்வது, நீலகிரி, தருமபுரி போன்ற மாவட்டங்களில் நியாய விலைக் கடைகளில் மக்களுக்கு கேழ்வரகை வழங்குவது, அரசு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் விடுதிகளில் சிறுதானிய உணவுகளை வழங்குவது போன்ற நடவடிக்கைகள் இதன்கீழ் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இவற்றைத் தாண்டியும் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப சிறுதானியங்களை பழங்குடிகள் பயிரிடுவது தொடர்பாக, சில நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.
அதன்படி, காலநிலை மாற்றத்ததைத் தாங்கவல்ல சிறுதானியங்களைப் பயிரிடுவதற்கான உத்திகள், வானிலைக்கு ஏற்ப எந்த வகை பயிர்களைப் பயிரிடலாம் என்ற ஆலோசனைகளை பழங்குடி விவசாயிகளுக்கு வழங்குதல், பயிர்க்கடன், காப்பீடு போன்ற திட்டங்களை பழங்குடி மக்களிடம் கொண்டு செல்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவை இந்த ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டன.
அதேபோன்று, சிறுதானிய விவசாயத்தில் பழங்குடி விவசாயிகளுக்கு உள்ள பாரம்பரிய அறிவை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து சந்தை வசதி உள்ளிட்டவற்றையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என அந்த ஆய்வு கூறுகிறது.