கர்நாடகாவில் காய்கறி வியாபாரி வேதனை.. ரூ. 29 லட்சம் ஜிஎஸ்டி.

இந்தியாவில் யுபிஐ (upi) செயலிகளை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதாவது பெரிய நகர்கள் முதல் சிறிய கிராமங்கள் வரை அனைத்து இடங்களிலும் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகளை மக்கள் பயன்படுத்தி வருகிறனர். குறிப்பாக இந்த செயலிகள் மூலம் தொலைவில் இருக்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் சில நொடிகளில் பணம் அனுப்ப முடிகிறது...
எனவே தான் மக்கள் யுபிஐ செயலிகளை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது இந்த செயலிகள் மூலம் சிறு வியாபாரிகளுக்குச் சிக்கல் வந்துள்ளது. அதாவது சமீபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த சில வணிகர்கள் திடீரென தங்களுடைய கடைகளில் இனிமேல் யுபிஐ பேமென்ட் ஏற்றுக்கொள்ளவே மாட்டோம் எனவும், பணம் மட்டுமே இங்கே செல்லும் என்று ஸ்டிக்கர் ஒட்டி இருந்தனர்...
அதாவது பெங்களூரில் சாலையோர கடைகளை நடத்துபவர்கள், டீக்கடை நடத்துபவர்கள், தள்ளுவண்டி வைத்திருப்பவர்களுக்குக் கூட ஜிஎஸ்டி (GST) நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவே பல்வேறு வணிகர்களுக்கும் யுபிஐ பேமென்ட்களுக்கு மாற்றாக மீண்டும் பணத்தை வழங்குமாறு கூறுவதற்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது...
இந்நிலையில் மீண்டும் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு சிறு காய்கறி வியாபாரிக்கு ரூ.29 லட்சம் ஜிஎஸ்டி செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதாவது கர்நாடகா மாநிலம் ஹாவேரி எனும் பகுதியில் ஒரு சிறிய காய்கறி கடை நடத்தி வரும் சங்கர்கௌடா ஹடிமணி என்பவருக்குத் தான் தற்போது இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.அதுவும் கடந்த நான்கு ஆண்டுகளாகக் காய்கறி விற்பனை செய்து வரும் சங்கர்கௌடா, தனது வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் பணம் செலுத்தி யுபிஐ (UPI) அல்லது பிற டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்துவதாகக் கூறுகிறார். ஆனால் ஜிஎஸ்டி அதிகாரிகள் இவருக்கு அனுப்பிய நோட்டீஸில், கடந்த நான்கு ஆண்டுகளில் 1.63 கோடிக்கு பரிவர்த்தனை செய்துள்ளதாகவும், அதற்காக ரூ. 29 லட்சம் ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்...
இந்த ஜிஎஸ்டி நோட்டீஸ் சங்கர்கௌடாவுக்கு பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் சங்கர்கௌடா இது குறித்துக் கூறுகையில், தான் விவசாயிகளிடமிருந்து நேரடியாக புதிய காய்கறிகளை வாங்கி தனது சிறிய கடையில் விற்பனை செய்வதாகவும், இப்போதெல்லாம் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பணத்தை எடுத்து வருவதில்லை யுபிஐ முறையைத் தான் பயன்படுத்துகின்றனர் எனவும் தெரிவித்தார்...
மேலும் அவர் ஒவ்வொரு ஆண்டும் தனது வருமான வரி அறிக்கைகளைத் தாக்கல் செய்து, சரியான பதிவுகளைப் பராமரித்து வருவதாகவும் தெரிவித்தார். ஆனால் தற்போது ரூ.29 லட்சம் ஜிஎஸ்டி என்பது தன்னால் செலுத்த முடியாத ஒரு தொகை எனவும், இதை எப்படி ஏற்பாடு செய்வது என்று குழப்பத்தில் உள்ளதாக சங்கர்கௌடா கூறியுள்ளார்...
சமீப காலமாக கர்நாடகா ஜிஎஸ்டி துறை டிஜிட்டல் கட்டணங்களை ஏற்றுக்கொள்ளும் வணிகர்களை உன்னிப்பாக கவனத்து வருவதாகக் கூறப்படுகிறது. அதுவும் ஜிஎஸ்டி வரம்பை மீறும் வணிகர்கள் பதிவு செய்து வரி செலுத்தவில்லை என்றால் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று கூறியிருந்தது. அதன் பிறகே பல சிறு வணிகர்களுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் பறந்துள்ளது. இதைத் தொடர்ந்து சங்கர்கௌடா உள்ளிட்ட பல சிறு வணிகர்கள் யுபிஐ மூலம் பணம் வாங்குவதையே நிறுத்திவிட்டனர். கேஷ் (ரொக்கப் பணம்) மட்டுமே பெறுவோம் என அறிவித்துவிட்டனர்..