பயிர்க்காப்பீட்டுக்கு கால நீட்டிப்பு செய்ய வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்க்காப்பீட்டுக்கு கால நீட்டிப்பு செய்ய வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
குறுவை சாகுபடிக்கு பயிர்க்காப்பீடு செய்ய கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

தஞ்சாவூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. கல்லணைக்கு அருகில் உள்ள பூதலூர் வேளாண்மை வட்டார பகுதிகளில் மேட்டூர் அணை திறப்புக்குப் பிறகு கால்வாய்களில் தண்ணீர் வந்து நாற்று விட்ட விவசாயிகள் பலர் குறுவை நடவு செய்து உரம் இடும் பணிகள், களை எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிளை வாய்க்கால்களில் தண்ணீர் வந்து நாற்று விட்டவர்கள் தற்போது நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் குறுவை சாகுபடி செய்த பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள்

கிராம நிர்வாக அலுவலர்களிடம் உரிய சான்று பெற்று கம்ப்யூட்டர் மையங்களில் காப்பீடு செய்து வருகின்றனர். காப்பீடு தொடங்கிய நேரத்தில் குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகள் பெயரில் பிரிமியம் கட்டஇயலாத சூழ்நிலை நிலவியது.

இது குறித்து கோட்ட அளவில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முறையிட்டதன் அடிப்படையில் வேளாண்மை துறை முன்பு இருந்தது போல குத்தகை சாகுபடி விவசாயிகளும் அவர்கள் பெயரிலேயே காப்பீடு செய்யலாம் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் குத்தகை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மீண்டும் கணினி மையங்களை நோக்கி வர தொடங்கி உள்ளனர். பயிர் இன்சூரன்ஸ் பிரீமியம் கட்ட கடைசி நாள் ஜூலை 31-ந் தேதி என கூறப்பட்டுள்ளது. எனவே பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நீட்டிப்பு செய்து தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.