நட்சத்திர ஹோட்டல்களில் சந்திப்பு; அதிகாரிகளுக்கு தடை போட்டது மத்திய அரசு...

நட்சத்திர ஹோட்டல்களில் சந்திப்பு; அதிகாரிகளுக்கு தடை போட்டது மத்திய அரசு...
அமைச்சகத்தில் உள்ள, அனைத்து துறை செயலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார்..

புதுடில்லி: சமீபத்தில், கேபினட் செயலர் டி.வி.சோமநாதன் மத்திய அமைச்சகத்தில் உள்ள, அனைத்து துறை செயலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில், 'மத்திய அரசின் நல திட்டங்களுக்கு மக்களிடையே எப்படி வரவேற்பு உள்ளது... இதில் குறைகள் உள்ளதா? மக்கள் என்ன நினைக்கின்றனர். அவர்களுடைய கருத்து என்ன என்பது குறித்து, அரசுக்கு தெரிவதில்லை..

இதனால், புதுவிதமான திட்டங்களை அமல்படுத்துவதுடன், திட்டங்கள் மக்களுக்கு சரியாக சென்றடைகிறதா எனவும், அரசுக்கு தெரிய வரும். எனவே, அரசு அதிகாரிகள் மக்களை சந்திப்பதுடன், சுய உதவிக் குழுக்களையும் சந்திக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.

எதற்கு திடீரென இப்படி ஒரு உத்தரவு? இதுகுறித்து அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகையில், 'பொதுவாக, என்.ஜி.ஓ.,க்கள் மற்றும் மக்களை, அதிகாரிகள் சந்திப்பதுண்டு. அவர்களின் குறை, நிறைகளைக் கேட்டு, கேபினட் செயலருக்கு அனுப்புவர்; ஆனால், சில காலமாக இந்த சந்திப்பு நடப்பதில்லை; அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்..

ஒரு பெரிய சக்தி வாய்ந்த, 'லாபி' உருவாகிவிட்டது. 'யாருக்கு எங்கே, 'போஸ்டிங்' வேண்டும். அரசில் வேலை நடக்க வேண்டுமா?' என, அனைத்திற்கும் இந்த லாபி பணம் வாங்கியபடி, வேலை செய்கிறது. இதனால், அதிகாரிகள் யாரையும் சந்திப்பதில்லை; அச்சத்துடன் உள்ளனர்' என்றனர்.

இதை அறிந்த கேபினட் செயலர் தன் அறிக்கையில், 'அதிகாரிகள் தனியாக சந்திக்க தயங்கினால், உங்களுடன் இன்னொரு அதிகாரியை வைத்துக்கொண்டு சந்திக்கலாம். ஆனால், இந்த சந்திப்புகள் உங்கள் அலுவலகத்தில் தான் நடக்க வேண்டும்; நட்சத்திர ஹோட்டல்களிலோ அல்லது கிளப்களிலோ அல்ல' என, தெரிவித்துள்ளார்.

காரணம், 'இந்த பவர்புல் லாபி அதிகாரிகள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் சந்தித்து, தங்கள் வேலைகளை முடித்துக் கொள்கின்றனர். இதைத் தவிர்க்கவே, அலுவலகங்களில் சந்திக்க வேண்டும்' என, சொல்லியிருக்கிறார் கேபினட் செயலர்.