ஈரோடு | உடல்நலப் பாதிப்பால் விபரீத முடிவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

ஈரோடு: ஈரோடு அருகே உடல்நலம் பாதிப்பால் மனமுடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். ஈரோடு அருகேயுள்ள நஞ்சை ஊத்துக்குளி பொன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (50).
ஈரோட்டில் நகை பட்டறை நடத்தி வந்தார். இவரது மனைவி சசிகலா தேவி (42), மகள் தான்யலட்சுமி (20). தான்யலட்சுமி மனவளர்ச்சி குறைபாடு உள்ள நிலையில், சசிகலா தேவிக்கு தைராய்டு பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நாகேந்திரனுக்கு சமீபத்தில் வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
குடும்பத்தில் மூவருக்கும் உடல் சார்ந்த பாதிப்பு ஏற்பட்டதால் மனமுடைந்த நாகேந்திரன், சசிகலா தேவி, தான்யலட்சுமி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்த போலீஸார் 3 பேரின் சடலங்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
உடல்நலக்குறைபாடு காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக உறவினர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ள நாகேந்திரன், தங்களது இறுதிச் சடங்குக்காக வீட்டில் ரூ.25 ஆயிரம் வைத்திருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை என்பது எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு இல்லை. தற்கொலை எண்ணத்துக்கு தீர்வு தேட சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000, மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104, ஐகால் (iCall Pychosocial) உதவி எண் - 022-25521111 ஆகியவற்றில் தொடர்புகொள்ளலாம்.