பணக்கார லேடீஸ் தான் குறி.. குறைந்த ரேட்டில் தங்கம், 2 மடங்கு வட்டி! 20 கோடி சுருட்டிய பெங்களூர் பெண்

பெங்களூர்: குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பணம் பறிந்த குற்றச்சாட்டில் பெங்களூரில் 49 வயது பெண் மற்றும் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டனர். தங்கம் மட்டுமின்றி, முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் ஆசை காட்டி 20 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தக் காலத்தில் வகை வகையான மோசடிகள் அரங்கேறி வருகிறது. இதுபோன்ற மோசடிகளில் எதுவும் அறியாத படிக்காதவர்கள் தான் எப்போதும் சிக்குகிறார்கள் எனச் சொல்ல முடியாது. அதிகம் படித்த பணக்காரர்கள் கூட ஈஸியாக பணம் சம்பாதிக்க நினைத்து இதுபோல மோசடி பேர்வழிகளுக்கு இரையாகிறார்கள்.
அப்படியொரு சம்பவம் தான் அண்டை மாநிலமான கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் நடந்துள்ளது. குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாகவும் அதிக லாபம் தருவதாகவும் சொல்லி ஏமாற்றி சுமார் 20 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான பெண் பசவேஸ்வரநகரின் கிரிலோஸ்கர் காலனியைச் சேர்ந்தவர். அவரது கூட்டாளி சுனகடகட்டே பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
பணக்கார பெண்கள் குறி
அந்தப் பெண் மீது கோவிந்தராஜா நகர் மற்றும் பசவேஸ்வரநகர் காவல் நிலையங்களில் இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தப் பெண் பணக்கார பெண்களைக் குறிவைத்து, நல்ல லாபம் கிடைக்கும் முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதாகக் கூறிப் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். அவர் தன்னை சமூக ஆர்வலராகவும் ரியல் எஸ்டேட் ஏஜெண்டாகவும் காட்டிக் கொண்டு இருக்கிறார். மேலும், நிறைய அரசியல் தொடர்புகள் உள்ள தங்க வியாபாரி போலவும் காட்டிக் கொண்டார் இதன் மூலமே அவரால் எளிதாகப் பணக்கார பெண்களை ஏமாற்ற முடிந்துள்ளது.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பெண்களையே இவர் குறிவைத்துள்ளார். வெளிநாட்டிலிருந்து தங்கம் இறக்குமதி செய்வதாகவும் சொல்லியும் ரியல் எஸ்டேட் முதலீடுகள் மற்றும் பிஸ்னஸ் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகவும் சொல்லி மோசடி செய்துள்ளார்" என்றார்.
மேலும், அவர் நம்பிக்கைகளைப் பெறத் தனது வீட்டிலும் பிற இடங்களிலும் சின்ன சின்ன பார்ட்டிகளை வைத்திருக்கிறார். அதில் தனக்கு மலிவான வெளிநாட்டு தங்கம் கிடைப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும், டிவி டெண்டர், அதிக மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கிடைப்பதாகவும், அதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். அவரது நம்பிக்கையான பேச்சு மற்றும் நெட்வொர்க்கிங் திறன்களைப் பார்த்துப் பல பெண்கள் நம்பி பணத்தைக் கொடுத்துள்ளனர். சிலர் நேரடியாக ரொக்கமாகக் கொடுத்தனர், மற்றவர்கள் ஆன்லைன் மூலம் பணம் அனுப்பினர்.
30 பேர் புகார்
அந்த பணத்தை வைத்து அவரது கூட்டாளி தங்கத்தையும் வீட்டு உபயோகப் பொருட்களையும் வாங்கியுள்ளனர். உண்மையில் அவர்கள் பசவேஸ்வரநகரில் ஒரு சிட் ஃபண்ட் பிசினஸை நடத்தி வந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஒரு வருடத்திற்கு மேலாக முதலீட்டாளர்கள் பணம் கேட்ட போதிலும், அந்தப் பெண் பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். மேலும், சொன்னபடி வட்டியும் தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். இறுதியில், 30 பெண்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்
இந்த மோசடியில் ஒரு திரைப்பட இசை அமைப்பாளருக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் இது குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
இதற்கு முன்பே அந்தப் பெண் தன்னிடம் பணம் ஏமாற்றியதாகக் கோவிந்தராஜா நகர் காவல் நிலையத்தில் ஒரு பெண் புகார் அளித்திருந்தார். போலீஸ் நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து விசாரணைக்கு அந்தப் பெண் நேரில் ஆஜரானார். இருப்பினும், அப்போது சமரச உடன்பாடு ஏற்பட்டதால் அந்தப் பெண் புகாரைத் திரும்பப் பெற்றார். ஆனால், அவர் இவ்வளவு பேரை ஏமாற்றுவார் என்று அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லை என்று அந்த அதிகாரி கூறினார்.