மின் வாரியத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

சென்னை: மின்வாரியத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்வாரியத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, தமிழ்நாடு மின்வாரிய அப்ரண்டீஸ் தொழிற்சங்கம் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தொழிற்சங்கத்தின் தலைவர் டி.மகேந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டம் குறித்து, செய்தியாளர்களிடம் பொதுச்செயலாளர் நந்தகுமார் கூறியதாவது: தமிழக மின்வாரியத்தில் கள ஊழியர்களுக்கான 32 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதையொட்டி, மின்வாரியத்தில் பயிற்சி முடித்த டிப்ளமோ மற்றும் பி.இ. மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலமாகவும், ஐடிஐ முடித்தவர்களுக்கு மின்வாரியம் மூலமாகவும் தேர்வுகள் நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. யார் தேர்வு நடத்தினாலும் சரி, மின்வாரியத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
ரயில்வே துறையில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி நேரடி பணி நியமனம் செய்துள்ளது. அதேபோல், திறன் மேம்பாட்டுத் துறையின் மூலம் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு 70 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசும் ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், இதை மின்வாரியம் நடைமுறைப்படுத்தாமல் தொடர்ந்து தவிர்த்து வருகிறது.
இதனால், மின்வாரியத்தில் பயிற்சி முடித்தவர்களின் நிலைமை கேள்விக் குறியாகி இருக்கும் நிலையில், ஐடிஐக்களில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அரசு துறை சார்ந்த நிறுவனங்களில் பயிற்சி முடிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் தான் ஐடிஐ, டிப்ளமோக்களில் மாணவர்களின் எண்ணிக்கை உயரும். எனவே, தமிழக முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, மின் வாரியத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க தகுந்த நடவடிக்கையை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.