கடன் வாங்கிய நண்பர் மரணம்: நிதி நிறுவனம் செய்த செயலால் என்.எல்.சி. ஊழியர் எடுத்த விபரீத முடிவு

கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (56 வயது). இவருடைய மனைவி லீமாரோஸ் (49 வயது). இந்த தம்பதிக்கு லீசா, ரீனா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். என்.எல்.சி. ஊழியரான ஆராக்கியதாஸ், 2-வது சுரங்கத்தில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். இவருடைய நண்பர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி இருந்தார். இதற்கு ஆரோக்கியதாஸ் ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளார்.
இந்த நிலையில் ஆரோக்கியதாசின் நண்பர் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துவிட்டார். இதனால் அவர் வாங்கிய கடன் தொகையின் மாத தவணையை ஆரோக்கியதாசின் வங்கிக்கணக்கில் இருந்து நிதி நிறுவனம் பிடித்தம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ஆரோக்கியதாஸ் வீட்டில் உள்ள அறையில் நேற்று காலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து லீமாரோஸ் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.