பறக்கும் வருமான வரி நோட்டீஸ்.. இனி UPI கிடையாது.. மீண்டும் கேஷ் பயன்பாட்டிற்கு திரும்பும் பல கடைகள்!

பறக்கும் வருமான வரி நோட்டீஸ்.. இனி UPI கிடையாது.. மீண்டும் கேஷ் பயன்பாட்டிற்கு திரும்பும் பல கடைகள்!
மீண்டும் கேஷ் பயன்பாட்டிற்கு திரும்பும் பல கடைகள்

சென்னை: சிறு, குறு கடைகளில் பயன்படுத்தப்படும் யு.பி.ஐ மூலம் வருமான வரித்துறையினர் பல கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்ப தொடங்கி உள்ளனர். அதாவது இத்தனை காலமாக சிறு, குறு கடைகள் பல லட்சம் வருவாய் ஈட்டினாலும் கூட வரி கட்டுவது இல்லை.

ஏனென்றால் அவர்களின் வருமானத்தை கணக்கிட முடியாது, உறுதி செய்ய முடியாது. அவர்கள் பல லட்சங்களை வருமானமாக ஈட்டினாலும் கூட வரி போட முடியாது. இப்போது யு. பி.ஐ வந்துவிட்டதால், அவர்களின் வருமானத்தை எளிதாக கண்டுபிடிக்க முடிகிறது. இதன் காரணமாக தற்போது சிறு, குறு கடைகளில் பயன்படுத்தப்படும் யு.பி.ஐ மூலம் வருமான வரித்துறையினர் பல கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்ப தொடங்கி உள்ளனர்.

யுபிஐ பரிவர்த்தனைகளை ஏற்க மறுப்பு

இதன்காரணமாக சிறு, குறு கடைகள் யு.பி.ஐ பரிவர்த்தனைகளை ஏற்க மறுத்துள்ளன. வரி விதிப்பை தடுக்கும் விதமாக வணிக நிறுவனங்கள் யுபிஐ (UPI) பரிவர்த்தனைகள் குறைந்துள்ளன. உதாரணமாக கர்நாடகாவில் ஜிஎஸ்டி ஏய்ப்பு நோட்டீஸ்கள் காரணமாக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் யுபிஐ (UPI) பரிவர்த்தனைகள் குறைந்துள்ளன. மே மாதத்தில் நாட்டின் மொத்த யுபிஐ பரிவர்த்தனைகளில் 7.73% கர்நாடகாவில் நடந்துள்ளது. இதன் மூலம் கர்நாடகா மாநிலம் மகாராஷ்டிராவுக்கு (13.19%) அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருந்தது

.கர்நாடக வணிக வரித் துறையானது, ஆண்டுக்கு 40 லட்ச ரூபாய்க்கு மேல் யுபிஐ மூலம் வருமானம் இருந்தும் ஜிஎஸ்டி செலுத்தாத வணிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன் காரணமாக சிறு வணிகர்கள் மற்றும் கடைக்காரர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஏற்க தயக்கம் காட்டி வருகின்றனர். பெங்களூருவில் சிலர் யுபிஐ கியூஆர் (QR) குறியீடு ஸ்டிக்கர்களை கடைகளில் இருந்து அகற்றியும் உள்ளனர்.

இதுகுறித்து டிபு நாயர் என்பவர் எக்ஸ் (X) தளத்தில் தெரிவிக்கையில், "இன்று காலையில் சலவை கடைக்காரர் ஒருவர் இனி யுபிஐ பேமெண்ட் வசதி இல்லை என்றும், பணமாக மட்டுமே செலுத்த வேண்டும் என்றும் கூறினார்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கர்நாடக வணிக வரிகளின் ஆணையர் விபுல் பன்சால் கூறுகையில், "இதுவரை 14,000 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. 40 லட்ச ரூபாய்க்கு மேல் யுபிஐ மூலம் ரசீது பெற்றவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. கள அதிகாரிகள் எத்தனை பேர் பதிவு செய்து முறையாக வரி செலுத்துகிறார்கள் என்பதை சரிபார்த்து வருகின்றனர்" என்றார்

வணிக வரித்துறை 2021-22 முதல் 2024-25 வரையிலான நிதியாண்டுகளில் யுபிஐ சேவை வழங்குநர்களிடமிருந்து வணிகர்கள் பெற்ற பணம் குறித்த தரவுகளை பெற்றுள்ளது. யுபிஐ மூலம் ஆண்டுக்கு 40 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டியும் ஜிஎஸ்டி செலுத்தாத வணிகர்களுக்கு கர்நாடக வணிக வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

யாரும் பீதி அடையத் தேவையில்லை. தற்போது நோட்டீஸ்கள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளன. அவர்கள் வந்து விளக்கம் அளிக்கலாம். அவர்களின் சூழ்நிலையைப் பொறுத்து நாங்கள் முடிவு செய்வோம். இந்த வணிகர்கள் GST விதிகளின்படி பதிவு செய்ய வேண்டிய வரம்பு அளவை கடந்தும், பதிவு செய்யத் தவறியது தெரியவந்துள்ளது. GST விதிகளின்படி, ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யும் வணிகர்கள் அல்லது 20 லட்சம் ரூபாய்க்கு மேல் சேவை அளிப்பவர்கள் GST-யில் பதிவு செய்ய வேண்டும். 1.5 கோடி ரூபாய்க்கு குறைவாக விற்பனை செய்பவர்கள் கலவை திட்டத்தை தேர்வு செய்து, உள்ளீட்டு வரி வரவு இல்லாமல் 1% வரி செலுத்தலாம்

இந்த நடவடிக்கை மூலம் வரி வருவாய் அதிகரிக்கும். அதே நேரத்தில், வரி ஏய்ப்பு செய்பவர்களை வரி செலுத்த வைப்பதே முக்கிய நோக்கம். அவர்களும் சட்டத்தை மதிக்க வேண்டும். ஏற்கனவே வரி செலுத்துபவர்களுக்கு இது நியாயமானதாக இருக்கும், என்று குறிப்பிட்டுள்ளார்.