லண்டன் சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

லண்டன் சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்
லண்டனில் பிரதமர் மோடியை வரவேற்ற இந்திய மக்கள்.

லண்டன்: இரண்டு நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை புதன்கிழமை அன்று தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, லண்டன் சென்றடைந்தார். அங்கு வசித்து வரும் இந்திய மக்கள், வம்சாவளியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இங்கிலாந்து, மாலத்தீவு ஆகிய 2 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்தின்போது இந்தியாவுக்கும், அந்த நாடுகளுக்கும் இடையே பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பயணத்தில் முதலாவதாக பிரதமர் மோடி இங்கிலாந்து சென்றடைந்தார். அங்கு 2 நாட்கள் தங்கியிருக்கும் பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸையும் சந்திக்கிறார்.

பின்னர் லண்டன் நகருக்கு அருகே அமைந்துள்ள பிரதமர் ஸ்டார்மரின் வீட்டில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், இரு நாடுகளிடையேயான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்.

இங்கிலாந்து பயணம் முடிந்ததும், வரும் 25, 26-ம் தேதிகளில் மாலத்தீவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள உள்ளார். மாலத்தீவின் சுதந்திர தின கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த பயணத்தின்போது மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

லண்டனில் பிரதமர் மோடி: இந்திய நேரப்படி வியாழக்கிமை (ஜூலை 24) நள்ளிரவு 12.05 மணிக்கு பிரதமர் மோடி லண்டன் சென்றடைந்தார். அவரை இங்கிலாந்து மற்றும் இந்திய பிரதிநிதிகள் வரவேற்றனர். விமான நிலையத்துக்கு வெளியே இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய மக்கள், மாணவர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

“லண்டனில் தரையிறங்கினேன். இந்தப் பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார கூட்டாண்மையை மேம்படுத்தி நெடுந்தோறும் இட்டுச் செல்லும் என நம்புகிறேன். மக்களுக்கான வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும். உலகளாவிய முன்னேற்றத்துக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே வலுவான நட்புறவு அவசியம்” என பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். இங்கிலாந்தில் உள்ள இந்திய மக்களின் அன்பான வரவேற்பால் நெகிழ்ச்சியடைந்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.