ராகுல் - பண்ட் சிறப்பான பேட்டிங்... இந்தியா நிதான ஆட்டம்

ராகுல் - பண்ட் சிறப்பான பேட்டிங்... இந்தியா நிதான ஆட்டம்
இந்தியா நிதான ஆட்டம்

லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 387 ரன்கள் குவித்துள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, லீட்சில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எட்ஜ்பாஸ்டனில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை 3:30 மணி முதல் தொடங்கி நடைபெறுகிறது. 

பும்ரா சேர்ப்பு 

இந்த டெஸ்ட் தொடருக்கான முதல் போட்டியில் ஆடிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு 2-வது போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டது. தற்போது 3-வது போட்டியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். முந்தைய போட்டியில் ஆடிய பிரசித் கிருஷ்ணாவுக்கு அளிக்கப்பட்டு பும்ரா அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதல் நாள் ஆட்டம் - டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் 

இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் ஆடுவதாக அறிவித்தது. இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக ஜாக் கிராலி - பென் டக்கெட் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடியை ஆட்டத்தின் 14-வது ஓவரில் உடைத்தார் நிதீஷ் குமார் ரெட்டி. அதனால், பென் டக்கெட் 23 ரன்னுக்கு நடையைக் கட்டினார். அடுத்த சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைக்க முயன்ற ஜாக் கிராலி - ஓலி போப் ஜோடியில், 18 ரன் எடுத்த தொடக்க வீரர் ஜாக் கிராலி விக்கெட்டை சாய்த்தார் நிதீஷ் குமார் ரெட்டி. அவர் ஒரே ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

இதன்பிறகு இணைந்த ஓலி போப் - ஜோ ரூட் ஜோடி நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினர். இதில் ஓலி போப் 44 ரன்னுக்கும், அடுத்து வந்த ஹாரி புரூக் 11 ரன்னுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 83 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 251 ரன்கள் அடித்திருந்தது. ஜோ ரூட் 99 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

2-ம் நாள் ஆட்டம் - இங்கிலாந்து பேட்டிங் 

வெள்ளிக்கிழமை 2-வது நாள் ஆட்டம் ஆரம்பமான நிலையில், நாளின் முதல் பந்திலேயே பவுண்டரி அடுத்த ஜோ ரூட் தனது 37-வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.

விக்கெட் கீப்பர் மாற்றம் 

இதனிடையே, முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், 34-வது ஓவரில் பந்தை பாய்ந்து விழுந்து பிடிக்க முயற்சித்த போது காயமடைந்தார். இடது கை ஆள்காட்டி விரலில் காயமடைந்த அவர் வலியால் துடித்தார். தொடர்ந்து கீப்பிங் செய்ய இயலாது என்று கூறியதால் பெவிலியன் திரும்பினார். அவருக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பராக துருவ் ஜூரெல் பணியாற்றி வருகிறார். 

ரூட் - ஸ்டோக்ஸ் ஜோடி சிறப்பாக மட்டையைச் சுழற்றி வந்த நிலையில், அவர்களது பார்ட்னர்ஷிப்பை பும்ரா உடைத்தார். 4 பவுண்டரியை ஸ்டோக்ஸ் 44 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். அசத்தலாக சதம் அடித்த ரூட் 199 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஸ்டோக்ஸ் விக்கெட்டுக்குப் பிறகு களம் புகுந்த கிறிஸ் வோக்ஸ் டக்-அவுட் ஆகி வெளியேறினார். 

இதையடுத்து களத்தில் இருந்த ஜேமி ஸ்மித்- பிரைடன் கார்ஸ் ஜோடி தங்களது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். அவர்களது பார்ட்னர்ஷிப்பை உடைக்க இந்திய பவுலர்கள் கடுமையாக போராடினர். அப்போது, 51 ரன்கள் எடுத்த ஜேமி ஸ்மித் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார் சிராஜ்.

அடுத்து வந்த ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 ரன்னுக்கு அவுட் ஆகி நடையைக் கட்டினார். அரைசதம் அடித்த பிரைடன் கார்ஸ் விக்கெட்டை சிராஜ் வீழ்த்தி அசத்தினார். இறுதியில் 112.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த இங்கிலாந்து 387 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளும், முகமது சிராஜ், நிதிஷ்குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இந்தியா பேட்டிங் 

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. ஜெய்ஸ்வால் 13 ரன்னிலும், கருண் நாயர் 40 ரன்னிலும் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினர். முந்தைய டெஸ்டின் ஹீரோவான கேப்டன் சுப்மன் கில் 16 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். பொறுமையாக ஆடிய மற்றொரு தொடக்க வீரர் கே.எல் ராகுல் அரைசதம் அடித்தார். 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 43 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்தது. ராகுல் 53 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 19 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். 

3-ம் நாள் ஆட்டம் - இந்தியா பேட்டிங்

இந்நிலையில், இன்று சனிக்கிழமை 3-ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. களத்தில் இருந்த ராகுல் - பண்ட் ஜோடி நிதானமாக மட்டையைச் சுழற்றி ரன்களை எடுத்து வருகிறார்கள். 

49 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்துள்ளது. 

இரு அணிகளின் வீரர்கள் பட்டியல் பின்வருமாறு: 

இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், கருண் நாயர், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), நிதீஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

இங்கிலாந்து: ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷோயப் பஷீர்.