ராமநாதபுரம்: ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முயன்ற வட்டாட்சியர், ஆர்.ஐ பைக் மீது வாகனத்தை மோதி விபத்து

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ரேஷன் அரிசி கடத்திய வேனை பிடிக்கச்சென்ற வட்டாட்சியர் பைக் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் செட்டிய தெருவிலிருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ராமநாதபுரம் குடிமைபொருள் வழங்கல் தனிப்படை வட்டாட்சியர் தமீம் ராஜாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வெள்ளிக்கிழமை அதிகாலை வருவாய் ஆய்வாளர் முத்துராமலிங்கத்தை உடன் அழைத்துக்கொண்டு அப்பகுதியில் பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டார்
ரோந்துப் பணியின் போது அப்பகுதியில் வந்த ஒரு மினி சரக்கு வாகனத்தை மறித்து சோதனை செய்ய முயன்றுள்ளனர், அப்போது வண்டியில் வந்த இருவர், திடீரென வட்டாட்சியர் , ஆர்.ஐ ஆகிய இருவரையும் தள்ளிவிட்டு வேகமாக வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
சுமார் 3 கிலோமீட்டர் தூரம் மினி சரக்கு வாகனத்தை துரத்திச் சென்று ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் மடக்கினர். அப்போது தாசில்தார் பைக் மீது சரக்கு வாகனத்தை கொண்டு மோதி விட்டு, டிரைவர் மற்றும் மற்றொரு நபர் தப்பித்து ஓடிவிட்டனர். விபத்தில் வருவாய் ஆய்வாளர் முத்துராமலிங்கத்திற்கு கையில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த ஆர்.ஐ முத்துராமலிங்கம் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து சரக்கு வாகனத்தை சோதனையிட்டதில் சாக்கு மூட்டைடைகளில் 3000 கிலோ ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது. மேலும் உள்ளே பதுங்கி இருந்த சிக்கல் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனை பிடித்து கேணிக்கரை போலீஸில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை ராமநாதபுரம் அரசு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
அரசு ஊழியர்களான வட்டாட்சியர், ஆர்.ஐ மீது வாகனத்தை மோதி கொலை முயற்சியில் ஈடுபட்டு தப்பித்து சென்றவர்களை போலீஸார் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், என ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் மற்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.