அருப்புக்கோட்டையில் முன்விரோதம் காரணமாக பெயின்டர் குத்திக் கொலை

அருப்புக்கோட்டையில் முன்விரோதம் காரணமாக பெயின்டர் குத்திக் கொலை
அருப்புக்கோட்டையில் முன்விரோதம் காரணமாக பெயின்டர் குத்திக் கொலை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் முன்விரோதம் காரணமாக பெயின்டர் ஒருவர் இன்று கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

அருப்புக்கோட்டை சக்தியவாணி முத்து நகர் காலனியைச் சேர்ந்தவர் பெயின்டர் தினேஷ் (24). இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சத்தியவாணி முத்து நகர் காலனி அருகே உள்ள தனியார் பார் அருகே தினேஷ் அமர்ந்திருந்ததாகவும், அப்போது அங்குவந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலருடன் திடீரென மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் தான் வைத்திருந்த கத்தியால் தினேஷை குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே தினேஷ் உயிரிழந்தார். தகவலறிந்த அருப்புக்கோட்டை நகர போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று தினேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விசாரணையில், தினேஷுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததும், இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் தினேஷ் கொலைசெய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. கொலையாளி யார் என்பது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.