டெலிவரி ஊழியர்கள் போல் நடித்து நகைக்கடையில் கொள்ளை: காசியாபாத்தில் அதிர்ச்சி!

டெலிவரி ஊழியர்கள் போல் நடித்து நகைக்கடையில் கொள்ளை: காசியாபாத்தில் அதிர்ச்சி!
டெலிவரி ஊழியர்கள் போல் நடித்து நகைக்கடையில் கொள்ளை: காசியாபாத்தில் அதிர்ச்சி!

கொள்ளையடிக்க வந்தவர்கள் டெலிவரி ஊழியர்களைபோல உடைந்து அணிந்து வந்ததுதான் அதிர்ச்சி. ஸ்விக்கி, பிளிங்கிட் டெலிவரி பார்ட்னர்களைபோல உடை அணிந்து வந்த கொள்ளையர்கள் கடையினுள் நுழைந்து 6 நிமிடங்களில் கைகளில் கிடைத்த நகைகளை கொள்ளை அடித்து தப்பி சென்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் டெலிவரி ஊழியர்கள்போல வேடமிட்டுவந்த இருவர், நகைக்கடை ஒன்றில் துணிகரக் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிளிங்கிட் (Blinkit), ஸ்விகி (Swiggy) நிறுவனங்களின் சீருடையில் வந்த கொள்ளையர்கள், வெறும் 6 நிமிடங்களில் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் ANI செய்தி நிறுவனத்தால் பகிரப்பட்டுள்ளன. கடையில் தனியாக இருந்த ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டி, 2 கொள்ளையர்களும் பைகளில் நகைகளை அள்ளிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. சந்தேகம் வராதபடி சீருடை அணிந்திருந்த அவர்கள், கொள்ளையடித்த நகைகளுடன் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினர். கொள்ளையர்கள் தப்பியோடியதும், ஊழியர் வெளியே ஓடிவந்து உதவிக்காக அலறும் காட்சியும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

கடையின் உரிமையாளர் கிருஷ்ணகுமார் வர்மா மதிய உணவுக்குச் சென்றிருந்தபோது இந்தக் கொள்ளை நடந்துள்ளது. சம்பவத்தின்போது சுபம் என்ற ஊழியர் மட்டுமே கடையில் இருந்துள்ளார். கொள்ளையர்கள் தப்பித்தவுடன் சுபம் உடனடியாக வர்மாவுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

புகாரின்பேரில், அடையாளம் தெரியாத 2 பேர் பைக்கில் வந்து, அவரது நகைக்கடையில் துப்பாக்கி முனையில் 20 கிலோ வெள்ளி மற்றும் 25 கிராம் தங்கத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். சம்பவ இடத்தை காவல்துறையினர் ஆய்வு செய்தனர், விசாரணைக்‍காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன என்று டிரான்ஸ் ஹிண்டன் துணை ஆணையர் நிமிஷ் பாட்டீல் ANI-யிடம் தெரிவித்தார். வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையே, சாகிபாபாத் ஏசிபி ஸ்வேதா யாதவ் TOI-யிடம் கூறுகையில், கொள்ளைச் சம்பவத்தில் ஊழியர் சுபமிற்கு ஏதேனும் பங்கு உள்ளதா என்றும் அதிகாரிகள் விசாரித்து வருவதாகத் தெரிவித்தார். சம்பவத்தின்போது அங்கிருந்த ஊழியரின் ஈடுபாடு குறித்தும் நாங்கள் விசாரித்து வருகிறோம் என்று அவர் கூறினார். கொள்ளையர்களைக் கண்டறியவும், திருடப்பட்ட பொருட்களை மீட்கவும் பல குழுக்கள் களமிறக்கப்பட்டு, காவல்துறையின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது

இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு பயனர், "இது கொள்ளை இல்லை. யாரோ நகை ஆர்டர் செய்திருக்கிறார்கள், அதை 10 நிமிடங்களுக்குள் பேக் செய்து டெலிவரி செய்ய அவசரமாகச் செல்கிறார்கள். அவர்கள் எவ்வளவு அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்" என்று கிண்டலாகக் கூறியுள்ளார். மற்றொரு பயனர், "ஸ்விகி மற்றும் பிளிங்கிட் இப்படி ஒருவரோடு ஒருவர் இணைந்து செயல்படுகிறார்களா! மனிதர்களே, நான் வாழ்க்கையில் எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன்" என்று நகைச் சுவையாகப் பதிவிட்டுள்ளார். 3-வது நபர், "ரேபிடோவில் திரும்பி தங்கள் ஓயோவில் சென்று ஜெப்டோவில் சிற்றுண்டி ஆர்டர் செய்வார்கள் என்று நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார். 4-வது நபர் கேலியாக, "அவர்கள் உண்மையில் 10 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் எல்லாவற்றை செய்துவிட்டனர், கொள்ளையடித்து தங்களுக்கே டெலிவரி செய்து கொண்டனர்," என்று எழுதியுள்ளார்.