பசுமைப் பூங்காக்கள் இன்னும் தேவை!

பசுமைப் பூங்காக்கள் இன்னும் தேவை!
பசுமைப் பூங்காக்கள் இன்னும் தேவை!

சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ் உள்ள ரவுண்டானா பகுதியில் பசுமைப் பூங்கா அமைக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் 3.59 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பசுமைப் பூங்காவில் குழந்தைகள் விளையாடும் பகுதி, யோகா மையம், 8 வடிவ நடைபாதை, நடைபயிற்சி பாதை, 50 பேர் அமரும் அரங்கம் போன்ற பல வசதிகள் உருவாக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரவிருப்பது பாராட்டுக்குரியது.

ஏற்கெனவே கிண்டி கத்திப்பாரா பாலத்தின் கீழ் 5.9 லட்சம் சதுர அடியில். 14 கோடி ரூபாய் செலவில் கத்திப்பாரா சதுக்கம் அமைக்கப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட கத்திப்பாரா சதுக்கத்தில் 128 கார்கள் நிறுத்தும் வசதி, 340 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி, குழந்தைகள் விளையாடும் பகுதி, நடைபயிற்சி பாதை, நீரூற்று, பசுமைப் பூங்கா, உணவகங்கள் மற்றும் கலைப்பொருட்கள் விற்பனைப் பகுதி ஆகியவை 24 மணி நேரமும் திறந்திருப்பது பொதுமக்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது

 

சென்னை போன்ற பெருநகரங்களில் நெருக்கடி மிகுந்த வாழ்க்கை வாழ்ந்து வரும் பொதுமக்களுக்கு இதுபோன்ற சதுக்கங்கள் தங்களை பெருமளவில் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் இடமாகவும், பரபரப்பையும் படபடப்பையும் குறைத்துக் கொள்ளும் பகுதியாகவும் அமைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாகும்.

இதேபோன்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், அடையாறு இந்திராநகர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மூன்று இடங்களில் பொழுதுபோக்கு அம்சங்கள், சிறுவர்கள் விளையாடும் இடம், நடைபாதை, சிறு உணவகங்களுடன் கூடிய பசுமைப் பகுதிகளை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் என சென்னை போன்ற நகரங்களில், எங்காவது தீப்பிடித்தால் ஓடி வந்து நிற்பதற்கு கூட இடமில்லாத வகையில் வணிகமயமாகிவிட்ட நிலையில், இதுபோன்ற பசுமைப் பரப்புகள் முன்னெப்போதையும் விட அதிகம் தேவைப்படுகின்றன.

குறிப்பாக, படபடப்பான வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கும், பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கும் கூட மாரடைப்பு ஏற்படும் விநோத செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் பசுமைப் பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ராஜஸ்தானில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள செய்தி சமீபத்தில் வெளிவந்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது .

குழந்தைகள் ஆரோக்கியமாக விளையாட பொதுவெளி இல்லாததால், அவர்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பதும், திறன்பேசிகளில் மூழ்கி விடுவதும் கூட தற்போதைய பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கலாம். அவர்களை ஆரோக்கியமான பாதைக்கு திருப்ப பூங்காக்களையும், பசுமைப் பரப்புகளையும், சிறுவர்கள் விளையாடும் இடங்களையும் முடிந்த அளவுக்கு அதிகப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் அளித்து, முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்கி, திட்டங்களை வகுப்பது அவசியம்.