40 வங்கிக்கணக்குகளில் ரூ.106 கோடி பணம்: உ.பி.,யில் கைதான மதமாற்ற கும்பல் தலைவனின் சொத்து விவரம் அம்பலம்

40 வங்கிக்கணக்குகளில் ரூ.106 கோடி பணம்: உ.பி.,யில் கைதான மதமாற்ற கும்பல் தலைவனின் சொத்து விவரம் அம்பலம்
.பி.,யின் மதமாற்ற கும்பலின் மூளையாக செயல்பட்ட சங்கூர் பாபா

லக்னோ: உ.பி.,யின் மதமாற்ற கும்பலின் மூளையாக செயல்பட்ட சங்கூர் பாபா என்ற ஜலாலுதீன் என்பவருக்கு 40 வங்கிக்கணக்குகளில் ரூ.106 கோடி கோடி பணம் உள்ளதும், இவை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது

உ.பி., பல்ராம்பூர் மாவட்டத்தில் சட்டவிரோத மற்றும் மதமாற்ற நடவடிக்கைகள் நடப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்டம் முழுதும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியதில் மாதம்பூர் பகுதியை சேர்ந்த சங்கூர்பாபா என்ற ஜலாலுதீன் என்பவரையும், அவரது கூட்டாளியான நீத்து என்ற நஸ்ரின் என்பவரையும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நாச வேலைகளில் அவர்கள் ஈடுபட இருந்தது முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக, ஏழைகள், ஆதரவற்ற தொழிலாளர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், கணவரை இழந்த பெண்கள் ஆகியோருக்கு நிதியுதவி அளிப்பதாக கூறியும், திருமண வாக்குறுதி அளித்தும், மிரட்டல் விடுத்தும், மதமாற்ற நடவடிக்கையில் இருவரும் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சங்கூர்பாபா என்ற ஜலாலுதீன் ஆரம்ப காலத்தில் சைக்களில் சென்று வளையல் மற்றும் தாயத்து விற்று வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இன்று அவருக்கு மட்டும் 40 வங்கிக்கணக்குகள் உள்ளதும், அதில் ரூ.106 கோடி பணம் உள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த பணம் அனைத்தும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தான் வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. திடீரென அவருக்கு பணம் அதிகம் வந்துள்ளது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இவர், நேபாளத்தின் எல்லையில் உள்ள பல்ராம்பூர் மாவட்டத்தின், ரெஹ்ரா மாபி கிராமத்தில் பிறந்து வளர்ந்ததும், அக்கிராம தலைவராக வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது. மாத்பூர் கிராமத்தில் தர்கா அருகே பெரிய சொகுசு பங்களா ஒன்றை கட்டியுள்ளார். அதில் ஒரு பகுதியில் குடும்பத்தினர் வசிக்கவும், மற்ற பகுதியில் தனது ஆதரவாளர்களை வசிக்க வைக்கவும் திட்டமிட்டு இருந்தார். ஆனால், அதிகாரிகள் ஆய்வில், அக்கட்டடம் சட்டவிரோதமானது என கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புல்டோசர் மூலம் அது அடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

இது தவிர்த்து மஹாராஷ்டிராவின் லோன்வாலா பகுதியிலும் ரூ.16.49 கோடி மதிப்பில் கடந்த 2023ம் ஆண்டு சொத்து வாங்கி உள்ளார். இந்த சொத்தை விற்ற நபரிடமும் விசாரணை நடந்து வருகிறது. இன்னும் பல இடங்களில் இந்த சங்கூர்பாபா என்ற ஜலாலுதீனுக்கு சொத்துகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும், அவருக்கு உதவியவர்கள், மதம் மாறியவர்களுக்கு பணம் சென்று சேர்ந்ததா, அதனை அவர்கள் சட்டவிரோத காரியங்களுக்கு பயன்படுத்தினரா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.