ஜூலை 25 வரைதான் கெடு! "இதை" செய்யாவிட்டால் ரேஷன் கார்டு ரத்தாகும் அபாயம்!

சென்னை: அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் என்ற வகை கொண்ட ரேஷன் கார்டுகளை பெற்றிருக்கும் பயனாளிகள் தங்களது கைவிரல் ரேகையை ஜூலை 25 ஆம் தேதிக்குள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் செயல்பட்டு வரும் AAY திட்டத்தின் கீழ் இலவச அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் நிலையில், சரியான பயனாளிகளை அடையாளம் காண்பது, போலி கார்டுதாரிகளை நீக்குவது, இறந்தவர்களின் பெயர்களை அகற்றுவது போன்ற காரணங்களுக்காக இப்பதிவு அவசியமாக்கப்பட்டுள்ளது.
இதுவரை கைவிரல் பதிவு செய்யாத பயனாளிகள், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள ரேஷன் கடைக்கு நேரில் சென்று பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. வெளியூரில் இருப்பவர்களும், எந்த ஒரு நியாயவிலை கடையிலும் பதிவு செய்யலாம்.
அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுவதற்கேற்ப பதிவு செய்யாத ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும். மத்திய அரசு இந்த வகை பயனாளிகள் பற்றி முழுமையான விவரங்கள் இல்லாததால், மாநிலங்களுக்கு அதிக அளவில் ரேஷன் பொருள்களை பெற்று பயன்படுத்தாமல் அவற்றை முறைகேடு செய்கிறார்கள். இதனை தடுக்கும் விதமாகதான் இந்த கைவிரல் ரேகை பதிவு (பயோ மெட்ரிக்) திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே AAY, PHH ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், சற்றும் தாமதிக்காமல் கைவிரல் ரேகை பதிவு செய்து கொள்ளுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கு கால அவகாசமாக ஜூலை 25 ஆம் தேதி கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அப்படி செய்யாவிட்டால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது
.அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஏழ்மையான குடும்பங்களுக்கு குறைந்த விலையில் உணவு தானியங்களை வழங்குவதன் மூலம் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்கிறது. இந்த திட்டத்தின் கீழ், அரிசி, கோதுமை போன்ற உணவு தானியங்கள் சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன.
இந்த திட்டத்தில், ஹெச்ஐவி/எய்ட்ஸ் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஏழைகளுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், வறுமையைக் குறைக்கவும் இந்த திட்டம் உதவுகிறது.
முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH), வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் ஒரு வகை ரேஷன் அட்டையாகும். இந்த அட்டையை வைத்திருக்கும் குடும்பங்கள், அரசு வழங்கும் மானிய விலையில் உணவுப் பொருட்களைப் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். இந்த அட்டையை வைத்திருக்கும் குடும்பங்கள், நியாய விலைக் கடைகளில் அரிசி, கோதுமை மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை மானிய விலையில் வாங்க முடியும்
முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH) "Priority Household" என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த அட்டை வைத்திருப்பவர்கள், மாதந்தோறும் ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியங்கள் வரை பெற உரிமை உண்டு. முன்னுரிமை குடும்ப அட்டைகள், அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY), மற்றும் முன்னுரிமையற்ற குடும்பங்கள் (NPHH) என மூன்று வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன.