கிண்டியில் ரூ.400 கோடி பிரம்மாண்டம்... பிரம்மிக்க வைக்கும் பல்வேறு வசதிகள்

கிண்டியில் ரூ.400 கோடி பிரம்மாண்டம்... பிரம்மிக்க வைக்கும் பல்வேறு வசதிகள்
சென்னையில் கிண்டி பேருந்து நிலையத்தில் ரூ.500 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையின் மைய பகுதியாக கிண்டி செயல்பட்டு வருகிறது. மேலும், தாம்பரம் - பிராட்வே பேருந்து வழித் தடத்திலும், கடற்கரை - தாம்பரம் ரயில் தடத்திலும் கிண்டி முக்கிய பகுதியாக அமைந்துள்ளது. மேலும், ரயில், பேருந்து, மெட்ரோ ரயில்கள் இணையும் முக்கிய பகுதியாக கிண்டி உருவாகி உள்ளது. கிண்டி பகுதியில் ஏராளமான தொழில் நுட்ப நிறுவனங்கள், கல்வி கற்பிக்கும் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த அலுவலகங்கள் உள்ளன. இங்கு பணிபுரிவதற்காக வரும் ஏராளமான பொது மக்கள் ரயில், மெட்ரோ மற்றும் பேருந்து நிலையங்களை தினசரி பயன்படுத்துகின்றனர். இதனால், தினந்தோறும் சுமார் 1 லட்சம் பேர் இங்கு வந்து செல்கின்றனர்.

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், கிண்டி ரயில் நிலையத்தை ரூ.13.50 கோடியில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கிண்டி ஜி எஸ் டி சாலை பகுதியில் உள்ள சுரங்கப் பாதை அருகே சுமார் ரூ.400 கோடியில் 3.43 ஏக்கரில் ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து முனையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது..

மேலும், தற்போது உள்ள கிண்டி பேருந்து நிலையத்தை பல் நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகமாக மாற்றி வணிக வளாகம், நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம், வாகன நிறுத்தும் இடங்கள், ரெயில், பேருந்து, மெட்ரோ ரெயில் நிலையங்களை இணைக்கும் பிரம்மாண்ட நடை மேடை மேம்பாலம், வெளிப்புற நடை பாதைகள், எஸ்கலேட்டர்கள், இணைப்பு வாகன வசதி, வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன...

இந்தப் பணிகளுக்கான, சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விரைவில் இந்தப் பணிகளுக்கான டெண்டர் வெளியிடப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, ஆய்வு அறிக்கை தயார் செய்வதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறி உள்ளனர்..

ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகமாக கிண்டி மாறும் பட்சத்தில், தற்போது இருப்பதை விட கிளாம்பாக்கம், கோயம்பேடு, பிராட்வே, அண்ணா சதுக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். இதே போல, கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது...