தமிழ்நாடு முழுக்க.. ரேஷன் கடைகளில் வருகிறது யுபிஐ பரிவர்த்தனை.. எப்படி செயல்படும்? வெளியான தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், யுபிஐ (UPI) பணப் பரிவர்த்தனை முறையை அடுத்த ஒரு வருடத்திற்குள் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 37,328 ரேஷன் கடைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
ரேஷனில் யுபிஐ வசதி: முக்கிய அம்சங்கள்
தற்போது,மாநிலத்தில் வெறும் 10,661 கடைகளில் மட்டுமே டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி உள்ளது. இந்த புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வந்தவுடன், அனைத்து ரேஷன் கடைகளிலும் யுபிஐ (UPI) வசதி கிடைக்கும். இந்த வசதி மூலம் வாடிக்கையாளர்கள் எளிதாகவும், பாதுகாப்பாகவும் பணம் செலுத்த முடியும்..
இந்த திட்டத்தின் மூலம் கையாடல் சம்பவங்களைத் தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் அரசு இலக்கு வைத்துள்ளது. ரேஷன் கடைகளின் செயல்பாடுகளை நவீனமயமாக்குவதும் இதன் நோக்கமாகும். மேலும், ISO தரச்சான்றிதழ் பெறும் முயற்சிகளுக்கும் இந்த புதிய யுபிஐ வசதி உறுதுணையாக இருக்கும்..
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசு எல்காட் (ELCOT) நிறுவனம் மூலம் ஒரு POS கருவி, ஸ்கேனர் மற்றும் தானியங்கி பில்லிங் இயந்திரம் ஆகியவை அடங்கிய ஒரு தொகுப்பு வழங்கப்படும். இதற்காக ஒரு கடைக்கு சுமார் ரூ.20,000 வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் ரேஷன் கடைகளின் நிர்வாகத்தை மேம்படுத்த உதவும்.
ரேஷன் கடை தரம்
ரேஷன் கடைகளின் தரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தரத்திற்கான ISO 9001 தரச்சான்றிதழை 10,000-க்கும் மேற்பட்ட கடைகளும், சேமிப்பு பாதுகாப்புக்காக ISO 28000 தரச்சான்றிதழை 2,000-க்கும் மேற்பட்ட கடைகளும் பெற்றுள்ளன. இந்த சான்றிதழ்கள், கடைகளின் செயல்பாடுகளில் சிறந்த தரத்தை உறுதி செய்கின்றன.
மொத்தத்தில், தமிழகத்தில் யுபிஐ பணப் பரிவர்த்தனை முறையை அனைத்து ரேஷன் கடைகளிலும் அறிமுகப்படுத்துவதன் மூலம், அரசு டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கிறது. இது, கடைகளின் செயல்பாடுகளை நவீனமயமாக்குவதோடு, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க உதவும்.
தமிழ்நாடு ரேஷன் கடை
கூட்டுறவுத் துறையின் கீழ் நியாய விலைக் கடைகளில் உள்ள 3,353 காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கூட்டுறவு துறையின் கீழ் மேற்கொண்டுள்ள முக்கிய சாதனைகளை அரசு அதிகாரப்பூர்வ அறிக்கையாக வெளியிட்டுள்ளது 2021 முதல், 66.24 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.53,340 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. 11.70 லட்சம் பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.4,904 கோடி மதிப்பிலான தங்க நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1.01 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2,118 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. சுய உதவிக் குழுக்களுக்கான கடன் உச்சவரம்பு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டது. விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளை ஆதரிக்கும் வகையில் 11.88 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6,372 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.
47,221 மாற்றுத் திறனாளிகள், 16,578 பணிபுரியும் பெண்கள், 49,000 பெண் தொழில் முனைவோர் மற்றும் 4,494 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தின் கீழ் 86 துப்புரவுப் பணியாளர்கள் இயந்திரமயமாக்கப்பட்ட கழிவுநீர் வாகனங்களைப் பெற்று தொழில் முனைவோர்களாக மாறியுள்ளனர்..
கூடுதலாக, மாநிலம் முழுவதும் மலிவு விலையில் மருந்துகளை வழங்குவதற்காக 70 புதிய கூட்டுறவு மருந்தகங்கள் மற்றும் 1,000 முதலமைச்சரின் மருத்துவக் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த மைல் கற்கள் திராவிட மாடலின் உள்ளடக்கிய ஆட்சியை பிரதிபலிக்கின்றன. என்று கூறப்பட்டுள்ளது.
சேமிப்புக் கிடங்கு மேலாண்மை மற்றும் கூட்டுறவு வங்கிச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கியதற்காக மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாடு அரசு பல விருதுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கூட்டுறவுத் துறையின் கீழ் நியாய விலைக் கடைகளில் உள்ள 3,353 காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.