வட மாநிலங்கள் முதலிடம்; தமிழகம் கடைசி - ‘தூய்மை நகரங்கள்’ பட்டியல் சர்ச்சை

நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் வடமாநில நகரங்கள் ‘டாப்’ இடங்களிலும், சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்கள், கடைசி இடங்களிலும் குறிப்பிட்டு மத்திய அரசு வெளியிட்டுள்ள தேர்வுப் பட்டியலால் சர்ச்சை எழுந்துள்ளது.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகம் சார்பில் ‘சுவெச் சர்வெக் ஷான்’ 2024 - 25-ம் ஆண்டுக்கான நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 40 நகரங்கள் பட்டியலில் குஜராத் மாநிலம் அகமதாபாத் முதலிடமும், மத்தியபிரதேச மாநிலம் போபால் 2-வது இடமும், உத்தரபிரதேச மாநிலம் லக்னோ 3-வது இடமும் பிடித்துள்ளன.
இந்தப் பட்டியலில் 38-வது இடத்தை சென்னையும், கடைசி இடமான 40-வது இடத்தை மதுரையும் பிடித்துள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதுபோல், 3 லட்சம் முதல் 10 லட்சம் மக்கள்தொகை கொண்ட மாநகராட்சிகள் பட்டியலில், மகாராஷ்டிர மாநிலம் பயாந்தர் நகரம் முதலிடமும், சத்தீஸ்கர் மாநிலம் பிலாசுப்பூர் 2-ம் இடமும், ஜார்கண்ட் மாநிலம் ஜாம்சேத்பூர் நகரம் 3-ம் இடமும் பிடித்துள்ளன.
இந்த நகரங்கள் பட்டியலில் சேலம், ஈரோடு மாநகராட்சிகள் மிகவும் பின்தங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தூய்மை நகரங்கள் பட்டியலில் வடமாநிலங்களைச் சேர்ந்த நகரங்களே ‘டாப்’ இடங்களைப் பிடித்துள்ளதாகவும், தமிழக நகரங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளதாக வும் சர்ச்சை வெடித்துள்ளது..
இந்தத் தேர்வு கணக்கெடுப்பில் குறைபாடுகள் இருப்பதாகவும், மதிப்பெண்கள் வழங்கப்பட்ட முறையிலும் திருப்தி இல்லை என்று மாநகராட்சி அதிகாரிகள், தமிழக நகராட்சிகள் நிர்வாகத் துறை இயக்குநரிடம் முறையிட்டுள்ளனர். அதன் அடிப்படையில், இந்தத் தூய்மை நகரங்கள் பட்டியலை மறு ஆய்வு செய்ய தமிழக அரசு முறையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது...
இது குறித்து மதுரை மாநகராட்சி நகர்நலப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஓராண்டாகவே மாநகராட்சியில் தூய்மைப் பணிகள் சிறப்பாகவே மேற்கொள்ளப்படுகின்றன. வீட்டுக்கு வீடு குப்பை சேகரிப்பது 100 சதவீதம் இல்லாவிட்டாலும் 90 சதவீதம் முறையாகச் சேகரிக்கப் படுகிறது. இது மக்களுக்கே தெரியும். சேகரித்த குப்பை முறையாக உரக்கிடங்குக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால், வீட்டுக்கு வீடு குப்பை சேகரிப்பது வெறும் 37 சதவீதம்தான் என்று அந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.
அதேநேரத்தில் குடியிருப்புகள், சந்தைகள், நீர்நிலைகளின் தூய்மைப் பிரிவில் மதுரை மாநகராட்சிக்கு 100 சதவீத மதிப்பெண்களை வழங்கி உள்ளனர். வீட்டுக்கு வீடு குப்பை சேகரித்தால் மட்டும்தான், குடியிருப்புகள் தூய்மையாக இருக்க முடியும். இது முரண்பாடாக உள்ளது. குப்பை யைப் பிரித்து வாங்குவது, மறு சுழற்சி செய்வது போன்றவற்றில் குறைபாடுகள் இருப்பது உண்மைதான். ஆனால், ஒட்டுமொத்தமாக வடமாநில நகரங்களை ஒப்பிடும்போது மதுரை நகரம் கடைசி இடத்துக்கு தள்ளப்படும் அளவுக்கு மோசமாக இல்லை..
.பல லட்சம் பேர் திரண்ட மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுகளில் இதுவரை இல்லாத வகையில் சுவாமி வீதி உலா, கள்ளழகர் அழக கோவிலில் இருந்து வரும்போதும், செல்லும்போதும் தூய்மைப் பணியாளர்கள் 24 மணி நேரமும் குப்பை தேங்காமல் உடனுக்குடன் சேகரித்து அப்புறப்படுத்தி மக்களின் பாராட்டுகளைப் பெற்றனர்.
அதுபோல், சமீபத்தில் முதல்வர் வருகை, திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகத்தின்போதும் மிக சிறப்பாகத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப் பட்டன. தூய்மைப் பணியாளர்கள், நகர்நலப் பிரிவு அதிகாரிகள் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிந்து வரும்நிலையில், 10 லட்சம் மக்கள்தொகை கொண்ட நகரங்கள் பட்டியலில் கடைசி இடத்தில் மதுரை உள்ளதாக வெளியிட்ட அறிவிப்பு, தூய்மைப் பணியாளர்கள், அதிகாரிகளிடம் சோர்வையும், விரக்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில்தான் மதுரை நகரில் திறந்தவெளியில் மலம் கழித்தலே இல்லை என்பதற்கான சான்றிதழை, இதே சுவெச் சர்வெக் ஷான்’ இயக்கம் வழங்கியது. அப்படி இருக்கையில், பொதுக் கழிப்பிடங்கள் பராமரிப்பில் வெறும் 3 சதவீத மதிப்பெண் வழங்கி இருப்பதை ஏற்க முடியவில்லை.
இது தொடர்பாக மீண்டும் சர்வே மேற்கொண்டு மறு ஆய்வு செய்து புதிதாக தேர்வு பட்டியலை வெளியிட வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத் துறை மூலம் மத்திய அரசிடம் முறையிட உள்ளோம், என்று அவர்கள் கூறினர்..