கொடுங்கையூரில் 15 லட்சம் டன் பழைய கழிவுகள் அகற்றம்: மீட்கப்பட்ட 2 ஏக்கரில் மரக்கன்று நடும் மாநகராட்சி

சென்னை: கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கடந்த 8 மாதங்களில் 15 லட்சம் டன் பழைய கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. அதன் மூலம் மீட்கப்பட்ட 2 ஏக்கர் நிலத்தில் மரக்கன்றுகளை நட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் சேகரமாகும் குப்பை கடந்த 40 ஆண்டுகளாக கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்டப்பட்டு வருகிறது. அந்த குப்பை கிடங்கை சுற்றி 100 மீட்டர் தொலைவிலேயே குடியிருப்புப் பகுதிகள் உள்ளன.
எந்த விதி மற்றும் அறிவியல் முறையையும் பின்பற்றாமல், மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகைப்படுத்தாமல் மாநகராட்சி நிர்வாகம் அங்கு குப்பையை கொட்டி வந்ததால், குப்பை மலைபோல் குவிந்து கிடக்கிறது. இனிவரும் காலங்களில் குப்பை கொட்ட மாற்று இடம் தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியைச் சுற்றி காற்று மாசு, நிலத்தடி நீர் மாசுபடுதல் என பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டு வருகின்றது.
சுமார் 343 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் சுமார் 252 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள சுமார் 66.52 லட்சம் டன் பழைய திடக்கழிவுகளை ரூ.648 கோடி செலவில் பயோ மைனிங் முறையில் அகழ்ந்தெடுத்து, அந்த நிலத்தை மீட்டெடுக்கும் பணிகளை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாநகராட்சி தொடங்கியது.
கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி 3 லட்சம் டன் வரை அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தது. சில ஆரம்பக்கட்ட நடைமுறை சிக்கல்களை சந்திக்க வேண்டி இருந்தது. அதன் பின்னர் மார்ச் மாதத்திலிருந்து நாளொன்றுக்கு 10 ஆயிரம் டன் குப்பை கையாளப்பட்டு வந்தது.
இப்பணியின் தற்போதைய நிலவரம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “கொடுங்கையூரில் தற்போது 4 பிரிவுகளாக பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 8 மாதங்களில் மொத்தம் 15 லட்சம் டன் பழைய கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. அவற்றிலிருந்த மக்காத குப்பை எரிபொருளாக பயன்படுத்த அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் தற்போது 2 ஏக்கர் நிலத்தை மீட்டு, மாநகராட்சியிடம் ஒப்பந்ததாரர்கள் ஒப்படைக்க உள்ளனர். அந்த இடத்தில் மரக்கன்றுகளை நட்டு, மாநகரின் பசுமை பரப்பை அதிகரிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றனர்.