இப்படியொரு ஏற்ற தாழ்வை பார்த்ததே இல்லை!" சென்னை ஸ்டார் ஹோட்டலில்.. வெளிநாட்டு பயணி பகிர்ந்த வீடியோ

சென்னை: இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்திருக்கும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவர் இப்போது சென்னையில் தங்கியுள்ளார். அவர் சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ள நிலையில், இங்கு ஏற்ற தாழ்வு மிக மோசமாக இருப்பதாக அவர் பதிவிட்டிருக்கிறார். இது தொடர்பான வீடியோவை பதிவிட்டிருக்கும் அவர், இதுபோன்ற ஒரு வேறுபாட்டை வாழ்நாளிலேயே பார்த்ததில்லை என்றும் போஸ்ட் செய்துள்ளார்.
இந்தியாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் வெளிநாட்டுப் பயணிகள் சுற்றுலாவுக்கு வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் இந்தியாவின் அழகையும் பிரம்மாண்டத்தையும் கண்டு அவர்கள் வியந்து போகிறார்கள். அதேநேரம் இந்தியாவில் இருக்கும் ஏற்ற தாழ்வுகளும் அவர்களுக்கு அதிர்ச்சி கொடுப்பதாகவே இருக்கிறது..
சுற்றுலாப் பயணி
அப்படி இந்தியாவுக்கு வந்திருக்கும் சுற்றுலாப் பயணி ஒருவர், தென்னிந்தியாவில் பல்வேறு இடங்களையும் சுற்றிப் பார்த்து வருகிறார். அவர் இப்போது சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கிறார். இந்தியாவின் ஏற்ற தாழ்வை விவரிக்கும் வகையிலான ஒரு போஸ்ட்டை அவர் பகிர்ந்துள்ளார். சென்னையில் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கியுள்ள அவர் தனது அனுபவத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்...
டெக்லான் ரோலண்ட்ஸ் என்ற அந்த நபர் இப்போது சென்னைக்கு வந்துள்ளார். இங்குள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அவர் தங்கியுள்ளார். அடுத்த 4 மாதங்கள் அவர் இங்கிருந்தபடியே தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளையும் சுற்றிப் பார்க்கத் திட்டமிட்டுள்ளார். அவர் தனது பயணத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
5 ஸ்டார் ஹோட்டல்
தான் தங்கியிருக்கும் 5 ஸ்டார் ஹோட்டலில் இருக்கும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த ஜிம்மில் இருந்து பார்த்தால் அழகிய கடலை தெளிவாகப் பார்க்க முடியும். அந்த வீடியோவில் கடற்கரையை ஒட்டியுள்ள கட்டடங்களைக் காட்டிய அவர், அவை குடிசைப் பகுதிகள் போல இருப்பதாகவும் வாழ்க்கையில் இந்தளவுக்கு ஒரு செல்வ வேறுபாடுகள் ஏற்ற தாழ்வுகளைத் தான் இதற்கு முன் கண்டதே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்...
இதுவரை இப்படிப் பார்த்ததே இல்லை
இது தொடர்பாக மேலும் அவர் தனது போஸ்ட்டில், "இந்தியாவில் உள்ள ஒரு 5 ஸ்டார் ஹோட்டலின் சுத்தமான ஜிம்மில் இருந்து நான் வெளியே கண்ட காட்சி இது. இந்தியாவில் இருக்கும் செல்வ வேறுபாடு எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை இது காட்டுகிறது" என்று பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் இடதுபுறத்தில் இருந்த கட்டிடங்களைச் சுட்டிக்காட்டிய அவர், "நீங்கள் பார்க்கும் அந்தக் கட்டிடங்கள் குடிசைப் பகுதிகள். இது போன்ற வேறுபாட்டை நான் இதுவரை அனுபவித்ததில்லை" என்று அவர் பதிவிட்டிருக்கிறார்.
இது இந்தியாவில் உள்ள வருமான ஏற்றத்தாழ்வைக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார். அவர் மேலும், "இந்தக் காட்சி இந்தியாவின் மிகப் பெரிய செல்வ வேறுபாட்டை எடுத்துக்காட்டுகிறது. அந்த வேறுபாட்டைச் சுட்டிக்காட்டவே நான் குடிசைப் பகுதிகள் என்ற வார்த்தை பயன்படுத்தினேன்" என்று அவர் தெளிவு படுத்தியும் இருக்கிறார்..
நெட்டிசன்கள் சொல்வது என்ன
அவரது பதிவுக்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகிறார்கள். ஒரு தரப்பினர் அவர் சொல்ல வரும் கருத்துகள் உண்மை தான் என்கிறார்கள். மற்றொரு தரப்பினர் இது இந்தியாவுக்கு மட்டுமே இருக்கும் சிக்கல் இல்லை என்றும் உலகெங்கும் இந்த ஏற்ற தாழ்வுகள் இருக்கவே செய்வதாகவும் பதிவிட்டு வருகின்றனர்
ரோலண்ட்ஸ் தென்னிந்தியாவில் தங்கியிருந்து தனது அனுபவங்களைத் தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகிறார். அதைத் தனது சமூக வலைத்தளப் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்த்தாலே அவர் பல்வேறு இடங்களுக்கும் நேரில் சென்று அதை வீடியோவாக எடுத்து தனது அனுபவத்தைப் பகிர்ந்து வருவது தெரிகிறது.