பட்டாசு தொழிலாளியின் மகள்! உயர்வதற்கு கல்வி போதும்.. மும்பை ஐஐடியில் தேர்வான விருதுநகர் மாணவி

விருதுநகர்: விருதுநகரை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவிக்கு மும்பை ஐஐடியில் படிக்க இடம் கிடைத்துள்ளது. 127 செண்டி மீட்டர் உயரம் மட்டுமே கொண்ட மாணவி, கல்வியில் தான் உயர, தனது உயரம் ஒரு குறையல்ல என்பதை தனது கடின முயற்சியால் நிரூபித்துள்ளார். வறுமையான குடும்ப சூழலிலும் அந்த மாணவி சாதித்து காட்டியுள்ளார். என் மகள் ஜே இ இ அட்வான்ஸ்டு தேர்வில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவரது பெற்றோர் தெரிவித்தனர்
கல்வி என்னும் ஆயுதத்தால் தடைகற்களை படிக்கற்களாக மாற்றி எத்தகைய உயரத்தையும் எட்டலாம் என்பதை தமிழக மாணவ மாணவிகள் நிரூபித்து வருகிறார்கள். வறுமையான சூழலிலும் தங்கள் கடின உழைப்பால் நல்ல வேலை, உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க இடம் உள்ளிட்டவை கிடைப்பதை பார்க்க முடிகிறது.
அண்மையில், சேலம் மாவட்டம் சின்ன கல்வராயன் மலையை சேர்ந்த பழங்குடியின பெண் ராஜேஸ்வரிக்கு ஐஐடியில் சீட் கிடைத்துள்ளது. அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் படித்து ஜேஇஇ என்னும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதன் மூலம் பழங்குடியின சமூகத்தில் இருந்து முதல் மாணவியாக ஐ.ஐ.டி.யில் படிக்க சென்றார்.
அதேபோல, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் வறுமையான சூழலிலும், கேட் தேர்வில் சாதித்து பெற்றோருக்கு மட்டும் இன்றி கிராமத்திற்கே பெருமை சேர்த்தார். இந்த நிலையிதான், விருதுநகரை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவிக்கு மும்பை ஐஐடியில் படிக்க இடம் கிடைத்துள்ளது. 127 செ.மீட்டர் உயரம் மட்டுமே கொண்ட மாணவி, கல்வியில் தான் உயர, தனது உயரம் ஒரு குறையல்ல என்பதை தனது கடின முயற்சியால் நிரூபித்துள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:-
வறுமையான குடும்ப சூழல்
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி யோகேஸ்வரி. 17 வயதான இவர் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். 127 செ.மீட்டர் மட்டுமே உயரம் கொண்ட யோகேஸ்வரி படிப்பில் கெட்டிக்கார மாணவியாக இருந்தார். பிளஸ் டூ முடித்த இவருக்கு மும்பை ஐஐடியில் ஏரோஸ் ஸ்பேஸ் என்ஜினியரிங் படிக்க இடம் கிடைத்துள்ளது. இவரது அம்மா பட்டாசு தொழிலாளி, அப்பா டீக்கடையில் வேலை செய்து வருகிறார்.