அஜித் குமார் கொலை: காவல்துறை அத்துமீறல் கண்டிக்கத்தக்கது - ஓ.பி.எஸ் பேச்சு

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் கடுமையான கொடுமைகளை செய்துள்ளனர் என அ.தி.மு.க மீட்பு அணித் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்தார். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் வீட்டில், அவரது தாய் மற்றும் சகோதரரை சந்தித்து முன்னாள் முதலமைச்சர் ஓபன்னீர்செல்வம் ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், “மருத்துவ அறிக்கைகள் மூலமாக காவல்துறையினர் மேற்கொண்ட அத்துமீறல்கள் உலகிற்கு வெளிப்பட்டு விட்டன.
சட்டத்தை பின்பற்ற வேண்டிய காவல்துறை அதிகாரிகள் அதை மீறி செயல்பட்டுள்ளனர். அதிகாரத்தில் இருப்போர் தவறை தட்டிக் கேட்காததால், தவறு செய்பவர்களுக்கு தைரியம் வந்துள்ளது. இந்த சூழ்நிலை மாற்றப்பட வேண்டியது அவசியம். இல்லையெனில், தி.மு.க அரசு மிகப்பெரிய அதிர்வை சந்திக்க நேரிடும்.
தவறு செய்தவர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, சட்டப்படி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. அ.தி.மு.க மீட்பு அணியின் சார்பில் இந்த அத்துமீறல்களை கடுமையாக கண்டிக்கிறோம்." என்று அவர் கூறினார்.