வைகோவுக்கு எதிரியாக மாறுவார் துரை வைகோ!” - மதிமுக விவகாரங்களை உடைக்கும் மல்லை சத்யா நேர்காணல்

வைகோவுக்கு எதிரியாக மாறுவார் துரை வைகோ!” - மதிமுக விவகாரங்களை உடைக்கும் மல்லை சத்யா நேர்காணல்
மல்லை சத்யா

திமுக-வில் வைகோவை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது அவர் மீது கொலைப்பழி சுமத்தினார் கருணாநிதி. அப்போது அதைச் சொல்லி ஆதங்கப்பட்ட வைகோ, இப்போது மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா மீது துரோகி பட்டம் சுமத்தி அவரை நொறுங்கிப்போக வைத்திருக்கிறார். “இதைவிட, தலைவர் வைகோ விஷத்தைக் கொடுத்து குடிக்கச் சொல்லி இருந்தாலும் சந்தோசமாக குடித்திருப்பேனே” என மருகிக் கொண்டிருக்கும் மல்லை சத்யாவிடம் செய்தியாளர்கள் பேசும்போது 

உங்களது அரசியல் பயணம் மதிமுக-வில் தான் தொடங்கியதா?

முதலில் திமுக-வில் இருந்தேன். திமுக மூத்த தலைவரான மதுராந்தகம் ஆறுமுகம் என்னை வைகோவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். வைகோவுடனான முதல் சந்திப்பு அதுதான். அதிலிருந்து 32 ஆண்டுகளாக மதிமுக-வில் பயணிக்கிறேன்.

மதிமுக-வில் இருந்து மூத்த தலைவர்களான கண்ணப்பன், எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் போன்றவர்கள் வெளியேறியபோது, உங்களுக்கு உடன்பாடு இருந்ததா?

தலைவர் வைகோ வேதனைப்படக் கூடாது. அவருக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் என்ற உணர்வு மட்டுமே எனக்குள் இருந்தது. ஆனால், இங்கிருந்து சென்றவர்கள், “ஒரு நாள் எங்களுடைய நிலைமையில் நீ நிற்கும் போதுதான், இந்த வேதனையை அனுபவிப்பாய்” என்று சொன்னதை தற்போது அனுபவிக்கிறேன்.

சாரைப்பாம்பு தீண்டுவது போல் சத்தம் இல்லாமல் தீண்டி, எனக்கு நெருக்கடி கொடுத்தார் வைகோ” என்று நாஞ்சில் சம்பத் வெளியேறியபோது சொல்லி வருத்தப்பட்டார். அவருக்கும் மதிமுக-வில் நெருக்கடி கொடுக்கப்பட்டதா?

பொதுவாக சாரைப்பாம்பு விஷம் இல்லாதது. அது கடித்தால் யாரும் சாக மாட்டார்கள். ஆனால், நாஞ்சில் சம்பத் மதிமுக-வில் இருந்தபோது, பல கட்டங்களில் காயப்பட்டதாகவும், தனக்குப் போட்டியாக பலரை வைகோ உருவாக்குகிறார் என்றும் சொல்லி இருக்கிறார்.

துரை வைகோவுக்கு உங்கள் மீது அப்படி என்னதான் கோபம்?

ஐந்தாண்டுகளுக்கு முன்பு, அரசியலுக்கு துரை வர வேண்டும் என முதன்முதலாக சொன்னவன் நான். அவருக்காக எனது துணைப் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்து கொடுப்பதாகவும் கூறினேன். ஆனால், அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது.

“நீ வகிக்கும் பதவிக்கு துரை வரலாமா… நீயும், துரையும் ஒன்றா” என்று வைகோ உங்களிடம் கேட்டாரா?

மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் வைகோ பேசும்போது, “துரை வைகோவுக்காக தனது பதவியை விட்டுத் தருவதாக மல்லை சத்யா கூறியிருக்கிறார். மல்லை சத்யாவும், துரை வைகோவும் ஒன்றா? துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சத்யா விலகினால், அந்த இடத்திற்கு அவரது சமூகத்தைச் சார்ந்த ஒருவர் தான் வர முடியுமே தவிர, என் மகன் வர முடியாது” என்றார்.

பட்டியல் இனத்தைச் சேர்ந்தவன் என்ற அடிப்படையில் தான் எனக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டது என்ற சாதிய சிந்தனையுடன் வைகோவின் இந்தப் பேச்சு இருந்தது. என்னதான் சமூக நீதி பேசினாலும், அவர்கள் வேறுதான் என்பதை வெளிப்படுத்தியதோடு, என்னை அப்போதே காயப்படுத்தி விட்டனர். அதிலிருந்து நான் துரை குறித்துப் பேசுவதில்லை. இறுக்கமான மனநிலைக்குச் சென்று விட்டேன்.