ஹைகோர்ட்டில் ஆட்சியர்.. அடுத்த நாளே மணல் கொள்ளை!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பல ஆண்டுகளாக மணல் கொள்ளை நடைபெற்று வரும் நிலையில் உயர்நீதிமன்றம் சாட்டை எடுத்துள்ளது. திண்டுக்கல் ஆட்சியர் நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்ட நிலையில், சில தினங்களுக்கு முன்னர் மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரில் ஆஜராகி இருந்தார். இந்த நிலையில் அடுத்த நாளே திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மணல் மற்றும் மண் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பெரியகோட்டை அருகே நீதிமன்ற உத்தரவை மீறி பல அடி ஆழத்திற்கு ஆற்றில் மண் அள்ளப்பட்டு, கழிவு மணலாக விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது...
தற்போதைய சூழலில் தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டம் என்றால் அது திண்டுக்கல் தான். சுற்றிலும் மலைகள், ஆறுகள் என இயற்கை எழில் சூழ்ந்த மாவட்டம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே எலும்பு கூடாக காட்சியளிக்கிறது.
காரணம் கனிமவள கொள்ளை. குடகனாறு, சந்தானவர்த்தினி ஆறு உள்ளிட்ட பல ஆறுகள் பாயும் திண்டுக்கல் மாவட்டத்தில் கணக்கு வழக்கு இல்லாமல் கடந்த சில ஆண்டுகளாக மணல் கொள்ளை அரங்கேறி வருகிறது...
குறிப்பாக சந்தானவர்த்தினி ஆற்றங்கரையோரம் இருக்கும் பகுதிகளில் மணல் கொள்ளை இரவு பகலாக நடைபெறுகிறது. ராஜக்காப்பட்டி, பெரியகோட்டை, வன்னியபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடைபெறுகிறது. குளங்களில் விவசாயத்திற்கு களிமண் எடுக்கிறோம் என அனுமதி வாங்கி பல நூறு அடிகள் ஆழமாக தோண்டி மணல் மற்றும் களிமண், செம்மண், சவுடு மண் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது...
இவை செங்கல் சூளைகளுக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தனியார் பட்டா இடங்கள் மற்றும் ஆறுகளில் மண்ணை அள்ளி அதனை தண்ணீரில் கழுவி மணலாக மாற்றி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கட்டிடங்களின் உறுதி தன்மையும் பாதிக்கப்படுவதாக புகார் சொல்லுகின்றனர் பொதுமக்கள். மேலும் தொடர் மண் திருட்டு காரணமாக நீர் வளம் பாதிக்கப்படுவதோடு நிலவளமும் சாகுபடி பரப்பும் குறைவதாக வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.
இந்த நிலையில் திண்டுக்கல் வன்னியபட்டி பகுதியில் மாயி என்பவரால் இரவு பகல் பாராமல் ஆற்றில் மண் திருடப்பட்டு வருகிறது. பல நூறு அடிகள் ஆழமாக தோண்டி மண் திருடப்பட்டு அதனை கழுவி மணலாக விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் தங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் கூறுகின்றனர் விவசாயிகள். மேலும் மழைக் காலங்களில் தேங்கும் நீரில் குழந்தைகள் விழுந்து பலியாகும் சம்பவங்களும் அதிகரித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்...
திண்டுக்கல் மாவட்டத்தில் சட்ட விரோத கனிமவளக் கொள்கையை தடுக்க வேண்டும் எனவும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இதை அடுத்து மாவட்ட ஆட்சியர் சரவணன் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி முன்பு ஆஜராகி திண்டுக்கல்லில் மணல் கொள்ளை நடைபெறவில்லை எனவும் சட்ட விரோதமாக இயங்கி வந்த குவாரிகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாக புகைப்பட ஆதாரங்களை சமர்ப்பித்தார்.
ஆனால் ஆட்சியர் ஆஜரான அடுத்த நாளே திண்டுக்கல் பெரியகோட்டை பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி சட்டவிரோத மணல் மற்றும் மண் கொள்ளை நடைபெற்று வருகிறது. குறிப்பாக நீதிபதிகள் முன்பு வழக்கு தொடரப்பட்டபோது தர்மர், மாயி ஆகியோரது பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் தான் தற்போது இந்த பகுதியில் மண் கொள்ளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பெயருக்கு புகைப்படங்களை சீல் வைத்தது போல் எடுத்துவிட்டு நீதிமன்றத்தையே அதிகாரிகள் ஏமாற்றி இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது...
அது மட்டுமல்லாமல் ஆட்சியர் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என உத்தரவிட்டாலும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கனிமவளத்துறை அதிகாரிகள் கண்ணை மூடி கொண்டதால், மண்ணை அள்ளி விற்று வருகின்றனர் என்ன குமுறுகின்றனர் விவசாயிகள். மேலும், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் போவதாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர்..