பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது எப்படி? எப்போது விண்ணப்பிக்கலாம்! எவ்வளவு கட்டணம்.. தேவையான ஆவணங்கள் என்ன???

பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது எப்படி? எப்போது விண்ணப்பிக்கலாம்! எவ்வளவு கட்டணம்.. தேவையான ஆவணங்கள் என்ன???
எப்போது விண்ணப்பிக்கலாம்

டெல்லி: உங்கள் பாஸ்போர்ட் காலாவதியாகும் தேதியை நெருங்கினால் அல்லது அதன் பக்கங்கள் தீர்ந்துவிட்டால் நீங்கள் அதைப் புதுப்பிக்க வேண்டும். அப்போது தான் உங்களால் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் வெளிநாடு பயணங்களைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியும். நமது நாட்டில் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது ஈஸி என்றாலும் அதில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அது குறித்து நாம் பார்க்கலாம்.

ஆன்லைன் பாஸ்போர்ட் சேவா அமைப்பு மூலம் ஈஸியாக பாஸ்போர்ட்டை நம்மால் புதுப்பிக்க முடியும். சில நேரங்களில் பாஸ்போர்ட்டை மீண்டும் பெற நமக்கு போலீஸ் சரிபார்ப்பு கூட தேவைப்படாது. அந்தளவுக்கு ஈஸி. அதேநேரம் விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தேவையான ஆவணங்கள், கட்டணங்கள் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.

ங்கள் பாஸ்போர்ட்டை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி

இதற்கு நீங்கள் பாஸ்போர்ட் சேவா இணையதளத்தில் முதலில் பதிவு செய்ய வேண்டும். அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் சேவா இணையதளத்திற்குச் செல்லுங்கள். நியூ யூசராக இருந்தால் தேவையான டேட்டாவை பதிவிட்டு கணக்கு ஓபன் செய்யுங்கள்

பிறகு லாகின் செய்து "re‑issue of passport" என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அதில் "Apply for fresh passport/re‑issue of passport" என்பதை கிளிக் செய்யுங்கள். புதுப்பிக்க என்ன காரணம் என்ற ஒரு கேள்வி இருக்கும்.. பாஸ்போர்ட் காலாவதி ஆகிவிட்டது. பக்கங்கள் தீர்ந்துவிட்டது உள்ளிட்ட காரணம் இருக்கும். அதில் சரியான காரணத்தைத் தேர்வு செய்யுங்கள். புதுப்பிக்கப்பட்ட தகவலுடன் படிவத்தை நிரப்பவும். சமர்ப்பிக்கும் முன் படிவத்தை முழுமையாகப் படிக்கவும்

மையத்தைத் தேர்வு செய்யுங்கள்

அடுத்து 3வது ஆன்லைன் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். Pay and Schedule Appointment என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு அருகிலுள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா (PSK), போஸ்ட் ஆபிஸ் PSK (POPSK) அல்லது பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம் (RPO) ஆகியவற்றில் எதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். கார்டு, யுபிஐ அல்லது நெட் பேங்கிங் என உங்களுக்கு ஏற்ற பேமெண்டை தேர்வு செய்யவும்.

அடுத்து உங்களுக்கான அப்பாயின்ட்மென்ட் ஸ்லாட்டை தேர்வு செய்யவும். உங்களுக்கு ஏற்ற நேரம் மற்றும் தேதியைத் தேர்ந்தெடுக்கவும். அப்பாயின்ட்மென்ட் உறுதி செய்யும் ரசீதைப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுக்கவும்.

அடுத்து என்ன செய்ய வேண்டும்

தேவையான ஆவணங்களுடன் குறிப்பிட்ட தேதியில் நீங்கள் தேர்வு செய்த மையத்திற்குச் செல்லுங்கள். அசல் ஆவணங்களுடன் நகல்களையும் எடுத்துச் செல்லவும். உங்கள் ஆவணங்கள் அங்குச் சரிபார்க்கப்படும். பயோமெட்ரிக்ஸ் (புகைப்படம் மற்றும் கைரேகைகள்) மீண்டும் எடுக்கப்படும். நீங்கள் பாஸ்போர்ட் அதிகாரியால் நேர்காணல் செய்யப்படலாம்.

பிறகு தேவை என்றால் போலீஸ் சரிபார்ப்பு நடக்கும். உங்கள் பாஸ்போர்ட் மூன்று வருடங்களுக்கு முன்பு காலாவதி ஆனாலோ அல்லது உங்கள் தற்போதைய முகவரி மாறி இருந்தாலோ போலீஸ் சரிபார்ப்பு கட்டாயமாக இருக்கும். அவ்வளவு தான் நமது வேலை முடிந்துவிட்டது. அதன் பிறகு நமது விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனிலையே கண்காணிக்கலாம்.

தேவையான ஆவணங்கள்

பழைய பாஸ்போர்ட் - பழைய பாஸ்போர்ட் அசல் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், அதன் முதல் மற்றும் கடைசி இரண்டு பக்கங்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களும் தேவை.

முகவரிச் சான்று - ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மின்சாரம், தண்ணீர் அல்லது தொலைப்பேசி கட்டண ரசீது, வங்கி பாஸ்புக் அல்லது வங்கி அறிக்கை, பதிவு செய்யப்பட்ட வாடகை ஒப்பந்தம் என எதாவது ஒன்றை எடுத்து செல்லலாம்.

பிறந்த தேதி சான்று- பிறப்புச் சான்றிதழ், பள்ளி சான்றிதழ், பான் கார்டு, ஆதார் அட்டை ஆகியவை பிறந்த தேதிக்கான சான்றிதழாக ஏற்கப்படும்.

கட்டணங்கள்

பெரியவர்களுக்கு 36 பக்கங்கள் கொண்ட பாஸ்போட் புத்தகத்திற்கு ரூ.1,500 வசூலிக்கப்படும். இதே 36 பக்கங்கள் கொண்ட பாஸ்போட் புத்தகத்தை தட்கல் முறையில் விண்ணப்பித்தால் அதற்கு ரூ.3,500 கட்டணம்.

60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் புத்தகத்திற்கு ரூ.2,000, இதையே தட்கல் முறையில் விண்ணப்பித்தால் ரூ.4,000.

18 வயதிற்கு குறைவானவர்கள்

36 பக்கங்கள் கொண்ட புத்தகத்திற்கு ரூ.1,000 மற்றும் தட்கல் பாஸ்போர்ட்டுக்கு ரூ.3,000 வசூலிக்கப்படும

எப்போது விண்ணப்பிக்கலாம்

பாஸ்போர்ட்டை புதுப்பிக்க அது காலாவதி ஆகும் வரை நாம் காத்திருக்க வேண்டும் என்று இல்லை. காலாவதியாகும் தேதிக்கு ஒரு வருடத்திற்கு முன்பே கூட நீங்கள் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கலாம். இது தேவையில்லாத குழப்பங்களைத் தவிர்க்கும். மேலும், பல நாடுகளில் குறைந்தது 6 மாத வெலிடிட்டி கொண்ட பாஸ்போர்ட்டை கேட்பார்கள். எனவே, அதிலும் கவனம் கொள்ளுங்கள்...