2026-27-ம் ஆண்டுக்குள் ஒரு கோடி வீடுகளில் சோலார் பேனல் அமைக்கப்படும்: மத்திய மந்திரி

சோலார் பேனல்களை அமைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்திற்கு ரூ.75,000 கோடிக்கும் அதிகமான நிதியை மந்திரி சபை ஒதுக்கீடு செய்துள்ளது.
புதுடெல்லி:
மத்திய அரசின் பிரதான் மந்திரி சூர்யா கர்: முப்தி பிஜிலி யோஜனா திட்டத்தின் கீழ் மேற்கூரையில் சோலார் பேனல்களை அமைக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார்.இந்தத் திட்டத்திற்கு ரூ.75,000 கோடிக்கும் அதிகமான நிதியை மந்திரி சபை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில், 2026-27 ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி சோலார் பேனல்கள் அமைக்க திட்டமிட்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என எரிசக்தி துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கூறியதாவது:
2026-27-ம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஒரு கோடி வீடுகளுக்கு சோலார் பேனல்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சூரிய மின்சக்தியை நிறுவுவதற்காக கடந்த ஆண்டு பிப்ரவரியில் பிரதமர் சூர்யா கர் முஃப்த் பிஜிலி யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.
ஜூன் 30 அன்று, மத்தியப் பிரதேசத்தில் சூரிய சக்தி (5,570 மெகாவாட்), காற்றாலை (3,195.15 மெகாவாட்), உயிரி மின்சாரம் (155.46 மெகாவாட்) மற்றும் நீர் மின்சாரம் (2358.71 மெகாவாட்) போன்ற பல்வேறு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து மொத்தம் 11,279.39 மெகாவாட் மின்சாரம் கிடைத்துள்ளது.
சூரிய பூங்காக்கள் மற்றும் அல்ட்ரா-மெகா சூரிய மின் திட்டங்களின் மேம்பாடு திட்டத்தின் கீழ், மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 4248 மெகாவாட் திறன் கொண்ட 8 சூரிய மின்சக்தி பூங்காக்களை அமைக்க அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது என தெரிவித்தார்.