திமிறி எழும் ஸ்ரீபெரும்புதூர்-ஓரகடம்.. இந்தியாவிலேயே நம்பர் 1.. இதை எதிர்பார்க்கவே இல்லையே.. அசத்தல்

திமிறி எழும் ஸ்ரீபெரும்புதூர்-ஓரகடம்.. இந்தியாவிலேயே நம்பர் 1.. இதை எதிர்பார்க்கவே இல்லையே.. அசத்தல்
அதிகமான முதலீடுகளை ஈர்த்து சாதனை படைத்துள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

சென்னை: இந்தியாவில் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படும் 3 மில்லியன் டன் டயர்களில் சுமார் 30% தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூர்-ஓரகடத்தைச் சேர்ந்தவை. இந்த பிராந்தியம் ₹15,000 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்து சாதனை படைத்துள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது..

ஸ்ரீபெரும்புதூர்-ஓரகடத்தை உள்ளடக்கிய பகுதி, ஒரு பெரிய வாகன உற்பத்தி மையமாக மட்டுமின்றி, டயர் உற்பத்தியிலும் ஒரு முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது. அப்போலோ டயர்ஸ், சிஇஏடி, ஜேகே டயர் போன்ற முன்னணி டயர் உற்பத்தியாளர்கள் இங்கு உற்பத்தி வசதிகளைக் கொண்டுள்ளனர். இந்த உற்பத்தி, பயணிகள் வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள், வணிக வாகனங்கள் மற்றும் சாலை பயன்பாட்டுக்கு உட்படாத டயர்கள் என அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கியது. ஹூண்டாய், டெய்ம்லர், ரெனால்ட்-நிஸான், யமஹா மற்றும் ராயல் என்ஃபீல்டு போன்ற பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு இது வலுவான ஆதரவை வழங்குகிறது..

அடித்து தூக்கும் ஸ்ரீபெரும்புதூர்-ஓரகடம்

சமீபத்தில், சிஇஏடி நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தொழிற்சாலையில் ₹450 கோடி விரிவாக்கத் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த விரிவாக்கம் ஸ்ரீபெரும்புதூர்-ஓரகடத்தில் டயர் உற்பத்தியை மேலும் ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் குழுமத்தின் அளவு, உள்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அமைவிடம் ஆகியவை உள்நாட்டு மற்றும் உலகளாவிய டயர் உற்பத்தியாளர்களுக்கு முக்கியமான உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தளமாக நிலைநிறுத்தியுள்ளன. இதன் காரணமாக இது நாட்டின் மிகப்பெரிய டயர் உற்பத்தி மையமாக விளங்குகிறது ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன..

மேலும், சென்னை, காட்டுப்பள்ளி மற்றும் காமராஜர் ஆகிய மூன்று பெரிய துறைமுகங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட சிறந்த தளவாடங்கள் இருப்பதால், உள்நாட்டு விநியோகம் மற்றும் ஏற்றுமதி திறம்பட நடைபெறுகின்றன. சென்னையின் ஆட்டோமொபைல் மையத்திற்கு அருகாமையில் இருப்பதால், வலுவான துறைமுக அணுகல் மற்றும் ஒருங்கிணைந்த சப்ளையர் சூழல் ஆகியவற்றுடன், இது மிகவும் சிறந்த டயர் உற்பத்தி தளமாக விளங்குகிறது.

மலரும் மறைமலைநகர்

அதேபோல் சென்னை மறைமலைநகரில் உள்ள போர்ட் மீண்டும் உற்பத்தியை மேற்கொள்ள உள்ளது. போர்ட் வருவதில் தாமதம் ஏற்படலாம் என்று கடந்த சில நாட்களாக செய்திகள்வந்தன. ஆனால் போர்ட் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில்.. நாங்கள் கண்டிப்பாக சென்னைக்கு திரும்புகிறோம். மீண்டும் ஆலையை திறப்பதற்கான கடைசி கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று அறிவித்து உள்ளது..

சென்னையில் இருந்து இவி வாகனங்களை உற்பத்தி செய்ய உள்ளனர். அதை வெளிநாட்டு மார்க்கெட்டில் விற்க உள்ளனர். சென்னைக்கு போர்ட் திரும்பி வந்தாலும் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்வது கடினம். அவர்கள் இந்திய மார்கெட்டிற்கு வர வாய்ப்பு இல்லை. மாறாக சென்னையில் உற்பத்தி செய்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வார்கள். 350 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஃபோர்டு நிறுவனத்தின் சென்னை யூனிட், ஆண்டுக்கு 200,000 வாகனங்கள் மற்றும் 340,000 இன்ஜின்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

கிட்டத்தட்ட கடந்த 4 வருட இருந்த காலத்திற்கு பின் சென்னைக்கு போர்ட் திரும்பி வந்துள்ளது. தமிழ்நாடு தொழிற்துறையின் தீவிரமான முயற்சியால்.. தொடர் பேச்சுவார்தையால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு மேற்கொண்ட பயணத்தில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு உள்ளது..