உங்க பணமே வேண்டாம்! சம்பளம் கம்மினாலும் என் ஊருக்கே போகிறேன்.." அமெரிக்காவில் புலம்பும் இந்திய ஐடி ஊழியர்

உங்க பணமே வேண்டாம்! சம்பளம் கம்மினாலும் என் ஊருக்கே போகிறேன்.." அமெரிக்காவில் புலம்பும் இந்திய ஐடி ஊழியர்
அமெரிக்காவில் புலம்பும் இந்திய ஐடி ஊழியர்

வாஷிங்டன்: ஐடி ஊழியர்கள் பலரும் அமெரிக்கா செல்லவே விரும்புவார்கள். அமெரிக்காவில் நல்ல சம்பளம், வேலை அழுத்தம் குறைவாக இருக்கும் என்பதால் பலரும் அமெரிக்கா செல்ல விரும்புவார்கள். ஆனால், அமெரிக்காவில் வேலை செய்து வரும் ஐடி ஊழியர் ஒருவர் சம்பளம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை இந்தியாவுக்கு வந்துவிடுகிறேன் என்கிறார். அவர் ஏன் இதுபோல சொல்கிறார். இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்

பொதுவாக இந்தியாவில் இருக்கும் பலருக்கும், குறிப்பாக ஐடி துறையில் வேலை செய்வோருக்கு, அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும் என்பதே லட்சியமாக இருக்கும். அமெரிக்காவில் வேலை செய்தால் நல்ல சம்பாதிக்கலாம் என்பதாலேயே பலரும் அமெரிக்காவுக்குச் செல்ல விரும்புவார்கள். இதே ஆசையோடு அமெரிக்கா சென்ற ஒருவர் இப்போது இந்தியாவுக்குத் திரும்புவது குறித்து யோசிக்க ஆரம்பித்துள்ளார்.

புலம்பும் இந்திய ஊழியர்

அமெரிக்காவில் வருமானம் ஓரளவுக்கு இருந்தாலும் அவருக்குப் பல்வேறு சிக்கல் ஏற்படுகிறதாம். குறிப்பாகத் தனியாக இருப்பதும் மன ரீதியாக அவரை ரொம்பவே பாதிப்பதால் அவர் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்புவது குறித்து யோசித்து வருகிறார். இது தொடர்பாக அவர் ரெட்டிட் பக்கத்தில், "நான் தற்போது H-1B விசா வைத்திருக்கிறேன். இது எனது முதல் வருட H-1B விசா. நான் அலுவலகத்தில் 9 டூ 5 வேலை பார்க்கிறேன். எனது அலுவலகமே ஒரு டாக்சிக்கான இடம் தான்

வேலையின் சிரமத்தைப் பற்றி நான் கவலைப்படவில்லை, ஆனால் சமீபகாலமாக எனது மனநலம் மிகவும் பாதிக்கப்படுகிறது.. நான் வீட்டில் தனியாக வசிக்கிறேன்.. உடன் பூனை மட்டுமே இருக்கிறது. ஓரளவுக்கு வருமானம் இருப்பதால் கார் வாங்க முடிந்தது. என் வேலையில், எனக்கு யாரும் மரியாதை கொடுப்பதில்லை. வேலையில் நான் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறேன். ஒவ்வொரு விஷயத்திலும் என மேனேஜர் குறுக்கிடுவார். இந்த வெறுப்பைத் தவிர, என் பெற்றோருடன் இருக்கவும் ஆசையாக இருக்கிறது.

மன அமைதியே இல்லை

அமெரிக்காவில் எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை. தினசரி உடற்பயிற்சி நிலையத்திற்குச் செல்வது மட்டுமே வேலையைத் தாண்டி நான் செய்யும் விஷயமாக இருக்கிறது. நான் எனது மன அமைதி முழுவதையும் இழந்துவிட்டதாகத் தோன்றுகிறது. நான் முன்னேற விரும்புகிறேன்.. ஆனால் ஏதோ ஒன்று என்னை முன்னேற விடாமல் தடுக்கிறது

முட்டாள்தனமா?

எனக்கு H1B விசா வந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை. இப்போது இதை சரண்டர் செய்வது முட்டாள்தனம் என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் வேலையைத் தாண்டி வேறு விஷயங்களைச் செய்ய அமெரிக்காவில் நேரமே இருப்பதில்லை. வாழ்க்கை கடினமானது என்று எனக்குத் தெரியும்.. சவால்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.. ஆனால் 26 வயதில் நான் எதையும் செய்யாமல் இருந்தால் இந்த டாக்சிக் வேலையில் சிக்கிவிடுவேன் என்று நினைக்கிறேன்.

நான் இந்தியாவுக்குத் திரும்பினால் வேலையில் மன அழுத்தம் அதிகரிக்கும், சம்பளமும் குறையும் என்பது எனக்குத் தெரியும். ஆனால், குறைந்தபட்சம் எனது குடும்பத்தினருடன் இருப்பேன். நான் உண்மையிலேயே மன உளைச்சலில் இருக்கிறேன். ஒவ்வொரு நாளை கடந்து செல்வதே பெரிய போராட்டமாக இருக்கிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள்

அவரது இந்த ரெட்டிட் பதிவு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பலரும் கிரெடிட் கார்டு கடன், கல்விக் கடன் இல்லை என்றால் இந்தியாவுக்குத் திரும்பிவிடுமாறு சொல்லி வருகிறார்கள். அதேநேரம் இன்னும் சிலர் இங்கும் அதே அழுத்தம் இருக்கும் என்றால் இந்தியா வந்தாலும் பிரச்சினை தீராது அதற்குப் பதிலாகச் சில காலம் பெற்றோரே அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லுமாறும் கூறி வருகிறார்கள்.