ஐஐஎம் கொல்கத்தா மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: போலீஸார் தீவிர விசாரணை

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஐஐஎம் (IMM) கல்வி நிறுவன வளாகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் கடந்த ஆண்டு பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடந்த மாதம் (ஜூன்) தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரி வளாகத்திற்குள் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்நிலையில், அந்தக் கொடூரச் சம்பவம் நடந்தேறிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு, கொல்கத்தாவில் உள்ள ஐஐஎம் (IMM) கல்வி நிறுவன வளாகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் அமைந்துள்ளது ஐஐஎம் கல்வி நிறுவனம். இந்தக் கல்லூரி வளாகத்தில் சக மாணவர் ஒருவரால், 2-ம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து அப்பெண் வெள்ளிக்கிழமை போலீஸில் புகாரளித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், தற்போது அந்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மாணவி தனது புகாரில் கூறியுள்ளதாவது: கவுன்சிலிங் என்ற பெயரில் ஆண்கள் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பின்னர் குற்றம் சாட்டப்பட்ட மாணவர் கொடுத்த போதைப்பொருள் கலந்த பானத்தை குடித்த பிறகு தான் சுயநினைவை இழந்ததாகவும், சுயநினைவு திரும்பியதும், தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை அறிந்ததாகவும் அம்மாணவி தெரிவித்துள்ளார்.