கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் – ஓராண்டுக்குப் பின் என்ன நிலைமை?

கள்ளக்குறிச்சியில் ஓராண்டுக்கு முன்பு சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் நொறுங்கிய வாழ்வை ஒட்டவைக்க முயன்றுகொண்டிருக்கிறார்கள். உயிர் பிழைத்தவர்கள் மரணத்திற்கு நெருக்கமான ஒரு வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
கள்ளக்குறிச்சியின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் கருணாபுரம், ஜோகியர் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக விவரிக்க முடியாத ஒரு பயங்கரம் நிகழ்ந்திருந்தது. அந்தப் பகுதியில் விற்ற கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்தவர்களில் சுமார் 65 பேர் உயிரிழந்தனர். அந்தப் பகுதிகளில் பெரும்பாலான வீடுகளின் வாயிலில் சடலங்கள் கிடத்தப்பட்டிருந்தன. எங்கு பார்த்தாலும் துயரத்தின் ஓலம் கேட்டுக்கொண்டிருந்தது.
இப்போது ஓராண்டு கழிந்துவிட்ட நிலையில், இந்தப் பகுதியில் உள்ள சுவர்களில் ஓராண்டிற்கு முன்பாக இறந்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் கண்ணில் படுகின்றன. மற்றபடி எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதைப்போல வெளிப்பார்வைக்குத் தோன்றுகிறது.