அகோரி சிகிச்சை": தாய்-மகளை ஒருவருடம் சிறை வைத்த மந்திரவாதி

யவத்மாலில் ஒரு 16 வயது சிறுமியையும் அவரது தாயையும் ஒரு மந்திரவாதி, அகோரி சிகிச்சை என்ற பெயரில் ஒரு வருடம் ஒரு அறையில் பூட்டி வைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
காவல்துறையினர் அந்த மந்திரவாதிக்கு எதிராக ஆட்கடத்தல் உட்பட மந்திரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர் .
இந்த வழக்குதான் என்ன? மகாராஷ்டிராவில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் இயற்றப்பட்டு 12 ஆண்டுகள் கழித்தும் அகோரி சிகிச்சை என்ற பெயரில் இதுபோன்ற வக்கிரமான நடைமுறைகள் தொடர்வது ஏன்? பார்க்கலாம்.
இந்த சம்பவம் யவத்மால் நகரில் உள்ள வஞ்சாரி பைல் பகுதியில் நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்ட மந்திரவாதியின் பெயர் மஹாதேவ் பரசுராம் பலாவே என்றும் அவர் வீட்டில் மந்திரவாதத்தை பயன்படுத்துகிறார் என்றும் யவத்மால் நகர காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அவர் வீட்டில் சோதனை நடத்திய போது ஒரு அதிர்ச்சியான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
யவத்மால் காவல்நிலைய காவல் ஆய்வாளர் ராம்கிருஷ்ண ஜாதவ் அளித்த தகவலின்படி, மஹாதேவ் பலாவே என்ற மந்திரவாதி சீமா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் அவரது 16 வயதான மகளை அகோரி சிகிச்சை என்ற பெயரில் ஒரு அறையில் பூட்டி வைத்திருந்தார்.
திக்ராஸ் பகுதியைச் சேர்ந்த சீமா தனது கணவரின் மரணத்திற்கு பிறகு அதிர்ச்சிக்குள்ளானர். அவர் மனச்சோர்வில் இருந்தார்.
யாரோ பில்லி சூனியம் செய்திருப்பதாக மூடத்தனமாக நம்பிய அவர் ஒரு மந்திரவாதியிடம் சிகிச்சைக்காக சென்றிருக்கிறார். அந்த மந்திரவாதி அவரையும் குணப்படுத்தமுடியும் என கூறியிருக்கிறார்.
மந்திரவாதியின் வீட்டை காவல்துறையினர் சோதனை செய்தபோது மந்திரவாதப் பொருட்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
அவர் மந்திரவாதியிடம் கடந்த ஜூலையில் சென்றிருக்கிறார். அப்போது முதல், அந்த மந்திரவாதி அவர்கள் இருவரையும் தனது வீட்டில் ஒரு அறையில் பூட்டி வைத்திருந்தார் .
குணப்படுத்துவதாக கூறி பலாவே என்ற அந்த மந்திரவாதி சீமாவுக்கு பல கொடூரங்களை செய்திருக்கிறார். அவர் அவரை அடித்து உதைத்திருக்கிறார்.
அவரது கொடூரங்கள் சீமாவின் உடலில் காயங்களாக காட்சியளிக்கின்றன. சில நாட்களுக்கு பின்னர் அவர் இதே போன்ற கொடுமையை சிறுமியான சீமாவின் மகள் உடலிலும் செய்யத் தொடங்கினார்.
அவர் அந்த சிறுமியை அடித்ததுடன், சவுக்காலும் அடித்திருக்கிறார். அவர் தனது உடலில் பல கொடுமைகளைச் செய்ததாக சிறுமி காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
அழுக்கும், அருவருப்பும்
அந்த மந்திரவாதி அவர்கள் இருவரையுமே அறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. இயற்கை உபாதைகளை கழிப்பது முதல் குளிப்பது வரை அனைத்தையும் அந்த அறையிலேயே செய்ய வைத்திருக்கிறார். அதன் விளைவாக அறை மிகவும் அசுத்தமாக இருந்தது.
அவர்கள் இருவரையும் அவர் பட்டினியாக வைத்திருந்தார். அதனால் காவல்துறை சோதனை நடத்தியபோது அவர்கள் இருவரும் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தனர்.
காவல்துறை மீட்ட பிறகு அவர்களுக்கு உணவு அளிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மந்திரவாதியின் தற்கொலை முயற்சி
காவல்துறையினர் வீட்டில் சோதனை நடத்த சென்றனர். தாயும் மகளும் சிறை வைக்கப்பட்டிருப்பதை பார்த்தவுடன் காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்த தொடங்கினர்.
காவல்துறையினர் அந்த தாய்-மகளிடம் விசாரணை நடத்திக்கொண்டிருந்த போது, மந்திரவாதி தனது கழுத்தில் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.
அவர் உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சீமாவின் மகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பிஎன்எஸ் சட்டத்தின் 118(2), 137, 138 ஆகிய பிரிவுகள் மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் 75ஆவது பிரிவு மற்றும் மந்திரவாத தடுப்பு சட்டத்தின் மூன்றாம் பிரிவின் கீழ் மந்திரவாதியின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காவல்துறையினர் மந்திரவாதியின் வீட்டை சோதித்தபோது, மந்திரவாதத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்களை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
அங்கு வேறு ஏதேனும் புதைத்துவைக்கப்பட்டுள்ளதா என கண்டறிய காவல்துறையினர் தோண்டிப் பார்த்தனர். ஆனால் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவையெல்லாம் நரபலி கொடுப்பதற்காக செய்யப்பட்டனவா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.