இந்திய விமானப்படையில் இருந்து விடை பெறுகிறது மிக் 21 ரக போர் விமானம்

இந்திய விமானப்படையில் இருந்து விடை பெறுகிறது மிக் 21 ரக போர் விமானம்
இந்திய விமானப்படையில் 60 ஆண்டுகள் சேவை புரிந்த மிக் 21 விமானம் இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக ஓய்வு பெறுகிறது;

இந்தியாவின் முதல் சூப்பர்சோனிக் போர் விமானங்களான மிக்-21 விமானங்கள், பாந்தர்ஸ் என்று அழைக்கப்படும் 23-வது படைப்பிரிவை சேர்ந்தவை. 1963-ம் ஆண்டு விமானப்படையில் சேர்க்கப்பட்டதில் இருந்து அனைத்து முக்கிய இந்திய ராணுவ நடவடிக்கைகளிலும் மிக்-21 ரக விமானங்கள் முக்கிய பங்கு வகித்தன.

கடந்த 1965, 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடனான போர்கள் முதல் 1999-ம் ஆண்டில் கார்கில் போர், 2019-ம் ஆண்டில் பாலகோட் தாக்குதல் வரை, மிக்-21 விமானங்கள் இந்தியாவின் வான் பாதுகாப்பின் மையமாக இருந்து வருகின்றன. இருந்தாலும் அடிக்கடி ஏற்படும் மிக்-21 ரக விமானங்கள் விபத்துகளில் சிக்கி 'பறக்கும் சவப்பெட்டி' என்ற துரதிர்ஷ்டவசமான புனைப்பெயரை பெற்று தந்தன.

ரஷியா, இந்தியா இணைந்து இந்த விமானங்களை உருவாக்கின. இதன் மூலம் உலகின் மிகப்பெரிய மிக்-21 விமான குழுவாக இந்தியா திகழ்கிறது. 1986-ம் ஆண்டில் கடைசியாக அதன் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. இதனை ரஷியா, இந்தியா, சீனா மற்றும் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பயன்படுத்தியது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை ஆற்றிய மிக்-21 விமானங்களுக்கு ஓய்வு அளிக்க இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வருகிற செப்டம்பர் மாதம் 19-ந் தேதி சண்டிகர் விமானப்படை தளத்தில் ஒரு பிரமாண்டமான பிரியாவிடை விழா நடைபெறும் என்று கூறப்படுகிறது