நாடு முழுக்க நாளை பந்த்.. சென்னையில் பஸ்கள் இயங்குமா? எவையெல்லாம் இயங்கும்? எந்த சேவைகள் பாதிக்கும்

அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாளை நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. நாடு தழுவிய இந்த பொது வேலை நிறுத்த அறிவிப்பால் நாளை என்னென்ன சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது? எந்தெந்த சேவைகள் வழக்கம் போல் இயங்கும்? சென்னையில் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்படுமா? என்பது பற்றி பார்க்கலாம்.
நாடு முழுவதும் நாளை பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் இந்த பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
மத்திய அரசு வங்கிகள், தொலைத்தொடர்பு, ரயில்வே, மின்சாரம், நிலக்கரி, சுரங்கங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் சாலை போக்குவரத்து போன்றவற்றை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆளும் கட்சியான திமுகவின் தொழிற்சங்கமான தொமுச, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சிஐடியுசி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏஐடியுசி உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் கலந்து கொள்ளவில்லை. நாடு தழுவிய இந்த பொது வேலை நிறுத்த அறிவிப்பால் நாளை என்னென்ன சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பது பற்றி பார்க்கலாம்.
வங்கி சேவைகள்
வங்கி மற்றும் நிதி சார்ந்த சேவைகள், தபால் சேவைகள் நாளை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல போக்குவரத்து சேவையும் பாதிக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் திமுகவின் தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால், பேருந்துகள் சேவையில் பாதிப்பு ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தத்த்தில் பங்கேற்பார்கள் என்பதால் அது சார்ந்த பணிகள் முடங்க வாய்ப்புள்ளது
வங்கி ஊழியர் சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே, வங்கி சேவைகள் முழுமையாக முடங்க வாய்ப்பு இல்லை. எனினும், செக் கிளியரன்ஸ், வாடிக்கையாளர் சேவைகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது
கல்வி நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வழக்கம் போல செயல்படும். லேசான பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றாலும் பள்ளி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் எந்த பாதிப்பும் இருக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
பொது பாதிப்பு ஓரளவு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தனியார் வாடகை கார் நிறுவனங்கள் செயலி சார்ந்து இயங்கும் கார்கள் உள்ளிட்டவற்றின் சேவையும் பாதிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் சாலை மறியல் பேரணி உள்ளிட்டவை நடக்க வாய்ப்புள்ளதால், இந்த சேவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது
.தமிழ்நாட்டில் நாளை அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கும். பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்து உள்ளோம் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். இதேபோல் சென்னையில் மாநகர பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் போக்குவரத்து சேவை பாதிப்பு இருக்காது எனத்தெரிகிறது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஒருநாள் சம்பள பிடித்தம் மற்றும் துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் எச்சரித்துள்ளார்.