விவசாயிகளுக்கு அரசு தரும் புதிய உதவி.. ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

விவசாயிகளுக்கு அரசு தரும் புதிய உதவி.. ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் குறுவை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் குறுவை சாகுபடி செய்யலாம் என்று கலெக்டர் சந்திரகலா அழைப்பு விடுத்துள்ளார். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20 கிலோ விதை, உயிரி உரங்கள் மற்றும் நெல் நுண்ணூட்டம் ஆகியவை 50 சதவீதம் மானியத்திலும், நெல் எந்திர நடவு செய்ய மானியமாக ரூ.4 ஆயிரம் என மொத்தம் 13 ஆயிரத்து 872 ஏக்கருக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றும் கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- "ராணிப்பேட்டை மாவட்டத்தில் கோடை மழை பெய்துவரும் நிலையில், வரும் குறுவை மற்றும் சொர்ணவாரி பருவத்திற்கு விவசாயிகள் ஆயத்தமாக உள்ளனர். கடந்த 2024-ம் ஆண்டு 40 ஆயிரம் ஏக்கரில் குறுவை, சொர்ணவாரி பட்டத்தில் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் 2025-26ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், நடப்பு ஆண்டில் டெல்டா அல்லாத பிற மாவட்டங்களுக்கும், குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய ராணிப்பேட்டை மாவட்டத்தில் சொர்ணவாரி பட்டத்தில் 43 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்படும், என எதிர்பார்க்கப்படுகிறது..

இதைத்தொடர்ந்து இத்திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20 கிலோ விதை, உயிரி உரங்கள் மற்றும் நெல் நுண்ணூட்டம் ஆகியவை 50 சதவீதம் மானியத்திலும், நெல் எந்திர நடவு செய்ய மானியமாக ரூ.4 ஆயிரம் என மொத்தம் 13 ஆயிரத்து 872 ஏக்கருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்ட வினியோகத்திற்கு தேவையான நெல் விதை, நுண்ணூட்ட உரங்கள், உயிரி உரங்கள் ஆகியவை அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மைய கிடங்குகளில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 2 ஆயிரத்து 300 ஏக்கர் ஆதி திராவிட விவசாயிகளுக்கும் மற்றும் 200 ஏக்கர் பழங்குடியின விவசாயிகளுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

எனவே இதுவரை பயன் பெறாத சொர்ணவாரி பருவத்தில் எந்திர நடவு செய்துள்ள ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் தங்களது நில ஆவணங்கள், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய விவரங்களுடன் அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.