பிரதமர் பதவியில் தொடர்ந்து 4,078 நாட்களை கடந்து இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த பிரதமர் மோடி

புதுடெல்லி: தொடர்ந்து 4,078 நாட்களாக பிரதமர் பதவியில் அமர்ந்து, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சாதனையை பிரதமர் நரேந்திர மோடி முறியடித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்று நேற்றுடன் (ஜூலை 25) 4,078 நாள்களை நிறைவு செய்துள்ளார். இதன் மூலம், முன்னாள் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் பதவிக்காலமான, தொடர்ச்சியாக 4,077 நாள்கள் நாட்டின் பிரதமராகப் பதவி வகித்திருந்த சாதனையை மோடி முறியடித்துள்ளார்.
1966-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி முதல் 1977-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி வரை இந்திரா காந்தி தொடர்ச்சியாக பிரதமராகப் பதவி வகித்திருந்தார். இதன்மூலம் அவர் தொடர்ச்சியாக 4077 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்தார்.
மேலும், இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பின்னர், காங்கிரஸ் கட்சியைச் சேராத மற்றும் இந்தி பேசும் மாநிலத்தைச் சேராத ஒருவர், நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்தவர் என்ற சிறப்பையும் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், 1971-ம் ஆண்டுக்குப் பின்னர் இந்திரா காந்திக்குப் பிறகு முழு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்த முதல் பிரதமரும் இவர்தான். மறைந்த முன்னாள் பிரதமர் நேருவைத் தவிர்த்து தொடர்ச்சியாக 3 முறை ஹாட்ரிக் வெற்றி பெற்ற பிரதமரும் மோடிதான்.
இந்நிலையில் பிரதமராக மோடி பதவியேற்று நேற்றுடன் (ஜூலை 25) தொடர்ச்சியாக 4,078 நாட்கள் பதவியில் இருந்துள்ளார். இந்த மைல்கல் சாதனையுடன், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு இந்திய வரலாற்றில் தொடர்ச்சியாக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றிய 2-வது பிரதமர் என்ற சிறப்பையும் மோடி பெற்றுள்ளார்.
2002, 2007, 2012 ஆகிய ஆண்டுகளில் குஜராத் பேரவைத் தேர்தலில் வெற்றியும், 2014, 2019, 2024 ஆகிய ஆண்டுகளில் மக்களவைத் தேர்தல்கள் என தொடர்ச்சியாக ஆறு தேர்தல்களில் ஒரு கட்சியின் தலைவராக, இந்தியாவின் அனைத்து பிரதமர்கள் மற்றும் முதல்வர்களில் ஒரே தலைவர் என்ற பெருமையையும் பிரதமர் மோடி தன்வசம் வைத்துள்ளார்.
நேரு முதலிடம்: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடர்ந்து 16 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்து முதல் இடத்தில் உள்ளார். இந்தச் சாதனையை பிரதமர் மோடி முறியடிக்க வேண்டும் என்றால், 2029-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றாக வேண்டும்.