கோவை - சத்தி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு விரைவாக தீர்வு வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

கோவை மாநகரில் பரபரப்பாக உள்ள சாலைகளில் ஒன்று கோவை - சத்தி சாலை. இது கோவை மாநகரில் உள்ள ஆம்னி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் துவங்கி டெக்ஸ்டூல், கணபதி, சரவணம்பட்டி தாண்டி செல்கிறது.
இந்த வழியே பிரபல மால், பல்வேறு ஐடி பூங்காக்கள், 20க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதில் பயணிப்பதன் மூலம் பெங்களூரு வரை கூட செல்ல முடியும். இது போன்ற காரணங்களால், இங்கு போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
எனவே இந்த சாலையை விரிவாக்கம் செய்யவேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக மக்களிடையே உள்ளது. தற்போது ஏற்படும் நெரிசல் சூழலால் இந்த சாலையில் பயணிப்பது மிக சிரமமாக உள்ளதாக வாகன ஓட்டிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த சாலையின் பல இடங்களில் யு டர்ன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் டிராபிக் சிக்னல் உள்ளது. இவை இருந்தும் வாகனங்கள் பல நேரங்களில் எளிதாக சாலையை கடக்க முடியாத சூழல் உள்ளது. எனவே இந்த சாலையின் விரிவாக்க பணிகளை விரைவாக ஆரம்பிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.