பாத்ரூம் கழுவி..மெக்கானிக் வேலை பார்த்து! ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்? அப்பாஸை இப்போ பாருங்க!

சென்னை: ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் அப்பாஸ் இப்போது இருக்கும் இடமும் தெரியாமல், ஆளே அடையாளமும் தெரியாமல் மாறிப் போய் இருக்கிறார். பாத்ரூம் கிளீனர் விளம்பரங்களில் நடித்து, பின்னர் மெக்கானிக் வேலை பார்த்ததாக அவர் சொன்ன நிலையில் தற்போது நரைத்த முடியுடன் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் எப்போதுமே ஒரு பிரச்சனை இருக்கிறது. திடீரென ஒரு நடிகர் சாக்லேட் பாயாக ரசிகர்கள், குறிப்பாக இளம் ரசிகைகளின் மனங்களை கவர்வார்கள். ஆனால் ஒன்று இரண்டு படங்களில் வெற்றி கொடி நாட்டும் அவர்கள் அதற்குப் பிறகு இருக்கும் இடம் தெரியாமலேயே போய் விடுவார்கள் என கூறுவார்கள்.
மேலும் தமிழ் சினிமாவில் கதாநாயகன் அழகாக இருந்தால் அதற்குப் பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காது என்றும் ஒரு புரளி இருக்கிறது. அது ஓரளவு உண்மை எனவும் சொல்லலாம். காரணம் அரவிந்த்சாமி, குணால், ஸ்ரீகாந்த், வினித் இப்படி பல நடிகர்கள் தங்கள் இளம் வயதில் சினிமாவில் அறிமுகமானபோது ரசிகைகளால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டனர்.
ஆனால் அதற்குப் பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாது. ஒரு சில நடிகர்கள் மட்டும் மீண்டும் கம்பேக் கொடுத்து வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருவார்கள். அதற்கு உதாரணமாய் அரவிந்த்சாமியை சொல்லலாம். அப்படி 90 கால கட்டங்களில் தமிழ் சினிமாவில் இளம் ரசிகைகளில் மனதை கொள்ளை கொண்டு சாக்லேட் பாயாக வலம் வந்தவர் அப்பாஸ். 1996 இல் வெளிவந்த காதல் தேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடித்திருந்தார்.
அப்போது அவருடன் வினித், தபு ஆகியோரும் நடித்திருந்தனர். அந்தப் படம் பெருவெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து சில படங்களில் நாயகனாக தோன்றினர். அதற்கு பிறகுதான் அவருக்கு சரிவே தொடங்கியது. ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் துணை நாயகனாக நடிக்க ஆரம்பித்தார். படையப்பா படத்தில் ரஜினியின் மருமகனாகவும், பம்மல் கே சம்பந்தம் படத்தில் கமலுக்கு தம்பியாகவும், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் கெஸ்ட் ரோல் போல நடித்திருப்பார் அப்பாஸ்.
அறிமுகமான புதிதிலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என இந்தியா முழுவதும் நாயகனாக வலம் வந்தார். அதற்குப் பிறகு துணை நடிகராக நடிக்க தொடங்கிய பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. கடைசியாக பச்சகள்ளம் என்ற மலையாள படத்தில் நடித்திருந்த அப்பாஸ் அதற்கு பிறகு திரைத்துறையில் இருந்து விலகி நியூசிலாந்து சென்று செட்டில் ஆனதாக சொல்லப்படுகிறது
அதற்குப் பிறகு பாத்ரூம் கிளீனர் விளம்பரங்களிலும் நடித்து வந்தார் அப்பாஸ். இதனால் அவர் கேலி கிண்டலுக்கும் ஆளாக நேர்ந்தது. அதே நேரத்தில் விளம்பரத்தில் நடிப்பது ஒன்றும் தவறில்லை, அப்பாஸ் நேர்மையாகத்தானே சம்பாதிக்கிறார் என அவருக்கு ஆதரவும் பெருகியது. இதற்கிடையே வெளிநாட்டில் செட்டில் ஆன அப்பாஸ் டாக்ஸி ஓட்டி வருவதாகவும், மெக்கானிக் வேலை பார்த்து வருவதாகவும் கூறப்பட்டது. இதற்கிடையே மீண்டும் தமிழ் திரை உலகில் அப்பாஸ் கால் பதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது ஆக்லாந்து பகுதியில் வசித்து வரும் அப்பாஸ் விரைவில் சென்னை வர இருப்பதாகவும் ஒரு சில படங்களில் அவர் கமிட் ஆகி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார் அப்பாஸ். நரைத்த தாடி, அதே நேரத்தில் பழைய ஹேர் ஸ்டைலுடன் மாஸ் லுக்கில் அப்பாஸ் இருக்கும் புகைப்படங்களை பார்த்து அவரது ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மீண்டும் அவர் தமிழ் திரையுலகில் ஒரு ரவுண்டு வரவேண்டும் எனவும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.