ஆலங்குளம் அருகே பள்ளி-கல்லூரி உரிமையாளர் வீட்டில் 1 கிலோ தங்கம், ரூ.55 லட்சம் கொள்ளை

ஆலங்குளம் அருகே பள்ளி-கல்லூரி உரிமையாளர் வீட்டில் 1 கிலோ தங்கம், ரூ.55 லட்சம் கொள்ளை
வீட்டில் ஆட்கள் இல்லாததை நேரத்தில் வீட்டு அருகில் உள்ள மரம் வழியாக ஏறிக் குதித்து, கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.;

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலப்பட்டினத்தை அடுத்த நவநீதகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் ராஜசேகர்(வயது 58). இவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். இவர் நெல்லை-தென்காசி நான்குவழிச்சாலையில் அடைக்கலப்பட்டினம் ஊருக்கு கீழ்புறத்தில் பி.எட் கல்லூரி மற்றும் பள்ளி நடத்தி வருகிறார். அவரது கல்வி நிறுவனத்தை அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் கவனித்து வருகின்றனர்.

இவர்களது கல்வி நிறுவனத்தின் வளாகத்திற்குள்ளேயே ராஜசேகர் வீடு கட்டி குடியிருந்து வருகிறார். கடந்த 3 தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற தனது உறவினர் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக ராஜசேகர் தனது குடும்பத்தினருடன் புறப்பட்டு சென்றுவிட்டார்.

இதனால் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், கல்வி நிறுவன வளாகத்தில் இருந்த காவலாளிகள் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று காலை ராஜசேகரின் மனைவி மகேஸ்வரி மட்டும் வந்தார். அப்போது, வீடு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது, சுமார் 1 கிலோ தங்க நகைகள், ரூ.55 லட்சம் பணம் திருடு போயிருந்தது தெரிய வந்தது.

சம்பவ இடத்திற்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். அரவிந்த், தலைமையில் ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தினர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு வீட்டு அருகில் உள்ள மரம் வழியாக ஏறிக் குதித்து, பணம் மற்றும் நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. மேலும் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களும் செயல்படவில்லையாம். கைரேகை நிபுணர்கள் பீரோ, கதவுகள் உள்ளிட்டவற்றில் பதிவான ரேகைகளை ஆய்வு செய்தனர். மேலும் ஆலங்குளம் போலீசார் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் நடந்த வீட்டில் சி.சி.டி.வி. காமிராக்கள் எதுவும் இல்லை. அதேநேரம் கல்வி நிறுவன நுழைவு வாயில் பகுதியில் காமிராக்கள் இருக்கிறது. ஆனால் அந்த காமிராக்களில் ஏதேனும் மர்ம நபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகவில்லை. இதனால் நெல்லை-தென்காசி 4 வழிச்சாலையில் உள்ள வணிக வளாகங்களில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது